Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

கதை இன்பம்
கா. அப்பாத்துரையார்



 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : கதை இன்பம் (அப்பாத்துரையம் - 35)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 16+304 = 320

  விலை : 400/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : [email protected]

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

கல்பனா சேக்கிழார்

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

கதை இன்பம்

முதற் பதிப்பு - 1956

இந்நூல் 1961 இல் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன.

எந்த முனையில் ஐயனே!

செங்கட் கடுங்கோ என்னும் பெயருடைய வழக்குமன்றத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் நடுநிலை தவறாதவராயினும் கடுமைமிகுதி உடையவர். குற்றவாளிகளிடம் சொட்டுச் சொட்டென்று கடுஞ்சொற்களும் வழங்குவார்.

ஒருநாள் துணிவும் வாய்த்துடுக்கும் உடைய ஒரு குற்றவாளியை நோக்கித் தம் கைப்பிரம்பை நீட்டிக் காட்டிய வண்ணம் அவர், “இதோ இந்தப் பிரம்பின் முனையில் ஒர் போக்கிலி நிற்கிறான்; பார்” என்றார். அவன் உடனே “எந்த முனையில், ஐயனே!” என்றான். தலைவர் அதைக் கேட்டு வெட்கிப் போனார்.

“எண்ணாது பேசுபவர் இழுக்குறுவர்”

எது இயற்கை?

ஓவியக்காரர் இருவரிடையே ஒரு போட்டி நிகழ்ந்தது. யார் ஓவியம் மிக்க இயற்கை நலம் வாய்ந்ததென்று பார்க்க யாவரும் விரும்பி வந்து கூடியிருந்தனர்.

முதல் ஓவியக்காரன் இரண்டு செந்தாமரை மலர்கள் வரைந்திருந்தான். அவற்றை மெய்யாகவே மலர்கள் என்று எண்ணித் தேனீக்கள் அவற்றின் மீது வந்து உட்கார்ந்தன. எல்லாரும் அவன் ஓவியத்தைப் புகழ்ந்தனர்.

இரண்டாம் ஓவியக்காரன் ஒரு திரையில் ஓவியம் வரைந்து அங்கே கொண்டுவந்து வைத்திருந்தான். அஃது அவன் எழுதிய படத்தை மறைத்த திரைதான் என்று எண்ணிய நடுவர், அவனைப் பார்த்து, “ஓவிய நண்பரே; திரையை அகற்றும். நான் ஓவியத்தைப் பார்க்க வேண்டும்” என்றார்.

இரண்டாம் ஓவியக்காரன், “அது திரையன்று ஐயா, திரையின் ஓவியமே!” என்றான். அனைவரும் முன்னிலும் வியப்படைந்தனர்.

குறையறிவு உடைய தேனீயை மயக்கிய முதல் ஓவியத்தைவிட, நிறையறிவு உடைய மக்களாகிய தம்மையே மயக்கிய இரண்டாம் ஓவியமே இயற்கை நலன் மிகுதியுடையது என்று நடுவர் முடிவு கட்டினார்.

உற்றிடத்துதவும் உணர்வு

மெய்யறிவு படைத்தவர்கள் கூட இடுக்கண் வந்த காலத்தில் உணர்விழந்து போவதுண்டு. மிகச் சிலரே அப்போதும் உய்த்துணர்வு தவறாதிருப்பர்.

பொருட் செல்வத்துடன் அறிவுச் செல்வமும் நிரம்பப் பெற்ற பெருந்தகை ஒருவர் இருந்தார் அவர் அஞ்சா நெஞ்சுடையவர் என்று பேர் வாங்கியிருந்தார். ஓராளுக்கு ஓராளாகத் தன்னை வந்து எதிர்க்கும் எவனுக்குந் தாம் அஞ்சுவதில்லை என்று அவர் அடிக்கடி கூறுவார்.

ஒருநாள் அவர் காட்டுவழியில் பெட்டி வண்டியேறிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சட்டென ஒரு திருடன் வண்டியை நிறுத்திப் பலகணி வழியாக அவர் மார்புமீது கைத்துப்பாக்கியை நீட்டிய வண்ணம், “எங்கே தனி மனிதனுக்கு அஞ்சாத நும் தறுகண்மை? இப்போது பணிந்து பணத்தைக் கொடுக்கிறீரா? உம்மைச் சுட்டு விடட்டுமா?” என்று உறுக்கினான்.

செல்வர் அமைதி இழவாமல் பணப்பையை எடுப்பவர் போல் சட்டைப் பையில் கையை இட்டுக்கொண்டே, “ஆம்; நான் சொல்லியதில் தவறொன்றுமில்லை. இப்போதும் நீ ஓராளாக வந்திருந்தால் யான் அஞ்சேன். உன்னுடன் அதோ உன் தோழனும் நிற்கின்றானே!” என்றார்.

“இஃதென்ன இந்த நல்ல நேரத்தில் நமது திருட்டில் பங்கு கொள்ளவந்த சனியன்!” என்றெண்ணித் திரும்பிப் பார்த்தான் திருடன். அந்த தறுவாய்க்கே காத்திருந்தார் செல்வர். பணப் பையை எடுப்பவர்போற் கையிட்டபோது, அவர் கையிற் பற்றியது பணப்பையை யன்று. மருந்து நிறைத்து முன்னெச்சரிக்கையாக வைத்திருந்த கைத்துப்பாக்கியைத்தான். திருடன் திரும்பியதும் அவர் அவனைச் சுட்டு வீழ்த்தினார்.

வலிமையால் அவரை வெல்ல எண்ணிய திருடன், அவர் அறிவுக்குத் தோற்று அழிவுற்றான்.

நயத்தக்க நாகரிகம்

பிறர் சினங்கொள்ளத் தக்க நேரத்திலும் பொறுத்து நயஞ் செய்யும் அருளாண்மை யாரிடம் இருக்குமோ அவரே, நாகரிகம் உடையவர் என்று கூறுதற்கு உரியவர்.

மேனாட்டில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பெரியார் ஒருவர் இருந்தார். அவருடைய ஆராய்ச்சிக் களத்தில் விலையேறிய பொறி வகைகள் பல இருந்தன. அவற்றுள் ஒன்று ‘வளியெடை அளவை’ என்பது. இதில் உள்ளே இருக்கும் ‘பாதரசம்’ உயர்ந்திருந்தால் சூழ உள்ள காற்று மண்டலம் நெகிழ்ச்சி யுடையது என்றும். தாழ்ந்திருந்தால் அது திட்பமுடையது, எனவே மழை பெய்யும் என்றுங் கூறிவிடலாம்.

ஒருகால், பலநாள் மழை பெய்யாமல் வறட்சியாக இருந்தது. மழை வருமா, வருமா என்று பலர் கவலையுடன் “வளியெடை அளவை”யைக் கூர்ந்து பார்க்க வருவர். அங்ஙனம் வந்தவர்களுக்குள் படபடப்புடைய இளைஞனொருவன் அதனைக் கவனக் குறைவுடன் கையாளவே, அது தவறி விழுந்து சுக்கல்சுக்கலாக நொறுங்கி விட்டது.

வந்திருந்தவர்கள் கூட இளைஞன் மேல் அடக்க முடியாத சீற்றங்கொண்டனர். ஆனால் அறிஞர், தாம் சினங்கொள்ளாததோடு பிறர் சீற்றத்தையும் மாற்றிவிட்டார்.

“அன்பர்களே! இப்போது கவலை தீர்ந்துவிட்டது. இனி நிறைய மழை வருவது உறுதி” என்றார் அவர்.

அவர் கூறுவதன் பொருள் விளங்காமல், அனைவரும் சற்று விழித்தனர். அப்போது அவர், “என் பொறி தாழ்ந்தால் மழை வரும். இன்று அது முற்றிலும் தாழ்வுற்றுவிட்டது. ஆகவே மழை வரும் என்பது உறுதியன்றோ?” என்றார்.

அவர் பொறுமையையும் நகைத்திறம் வாய்ந்த நயத்தையுங் கண்டு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.

கலைவாணரின் கண்டிப்பு

கலைஞர்க்கும் கண்டிப்புக்கும் மிகத் தொலைவு என்று சொல்வதுண்டு. ஆனால் இதற்கு விலக்கானவர் டீன் ஸ்விஃப்ட்டு என்ற ஆங்கில ஆசிரியர்.

ஸ்பிஃப்ட்டிடம் மிகுதியும் அன்பும் நன்மதிப்புங்கொண்ட செல்வர் ஒருவர் அவரை விருந்தினராகப் பாராட்டி வர வேற்றார். அச்செல்வரின் பணியாளும் முறைப்படி ஸ்விஃப்ட்டின் பணியாளை விருந்தினனாக மதித்துப் பாராட்டினான்.

ஸ்விஃப்ட்டு அச்செல்வரிடம் விடைபெற்று வர நேரமாயிற்று. அதற்குள் செல்வரின் பணியாள் உதவியால் ஸ்விஃப்ட்டின் பணியாள் தன் குதிரை மீதேறி ஸ்விஃப்ட்டுடன் செல்ல ஆயத்தமாக நின்றான். ஸ்விஃப்ட்டு வந்ததும் அவருக்கும் குதிரை ஏறச் செல்வரின் பணியாளே உதவிசெய்ய வேண்டியதாயிற்று.

குதிரையிலேறியதும் ஸ்விஃப்ட்டு தன் பணியாளை மகிழ்ந்து நோக்கிய வண்ணம், செல்வர் பணியாளைச் சுட்டிக்காட்டி, “எனக்கு உதவிசெய்த இந்நண்பனுக்கு இரண்டு வெள்ளி பரிசு கொடுக்கலாமல்லவா?” என்றார்.

பணியாளன் ‘கொடுக்கலாம்’ என்றான்.

பணயாள் இச்சிறு நிகழ்ச்சியை ஒரு நாகரிக முறை என்றெண்ணி மறந்துவிட்டான்.

ஆனால் ஊதியம் பெறும் நாளில் ஸ்விஃப்ட்டு தன் பணியாளுக்கு ஊதியத்தில் இரண்டு வெள்ளியைக் குறைத்துக் கொடுத்தார். அவன், “ஐயனே! இரண்டு வெள்ளி குறைவுற்றதே” என்று கேட்க அவர், “உனது தொழிலை ஒருவனுக்குக் கொடுப்பது உனது பொருளை ஒருவனுக்குக் கொடுப்பதையே ஒக்கும் என்று உணர்க!” என்றார்.

வேலையாள் தம் பிழையறிந்து வெட்கினான்.

உடைப்பண்பும் உளப்பண்பும்

வெள்ளிய ஆடைக்கும் வெள்ளை யுள்ளத்திற்கும் பேர்போன தலைவர் ஒருவர் இருந்தார். அவரை அழுக்கடைந்த ஆடையுடன் ஓர் அருங்கலைச் செல்வர் சென்று கண்டார்.

தலைவர் சற்று நேரம் புறக்கணிப்புக் காட்டியும், பேசும்போது ஏற இறங்கப் பார்த்தும் கடுஞ்சொல் சொல்லியும் அவரைப் பலவகையில் சிறுமைப்படுத்தினார்.

ஆனால், அக்கலைஞருடைய பேச்சு முறையாலும் நடையாலும் தமது மேடைப் பலகை மீது அவர் அவிழ்த்து வைத்த நூற்கட்டுகளாலும் தலைவர் அவர் தகுதி அறிந்து, அவரை மிகவும் பாராட்டிப் பல வகையிலும் உதவ முன் வந்தார். விடை கொள்ளும்போதும் தலைவர் தாமே இறங்கிவந்து கலைஞரை வழியனுப்பினார்.

அப்போது கலைச் செல்வர், முதலில் தாம் அடைந்த துன்பத்தையும் பின்பு பிரியுங்கால் தாம் பெற்ற பேற்றையும் ஒப்பிட்டு, நகைச்சுவையுடன், “வரும் போது வாராதே என்று குறிப்பு மீறி வந்தேன்; ஆனால் போகும்போது போகாதே என்ற குறிப்பை மீறிப் போகும்படியான பேறு வாய்த்தது” என்று இன்மொழி புகன்றார். தலைவர் புன்முறுவலுடன், “நான் யாரையும் உடைப் பண்பு கொண்டு மதித்துத்தான் வரவேற்பது வழக்கம், ஆனால், பிரிவது உளப்பண்பை மதித்தேயாகும். இதுவே இரண்டினிடையிலும் உள்ள வேற்றுமை,” என்று பரிந்து நன்மொழி கூறினார்.

நகை பகையை வெல்லும்

‘வெம்பகை’ என்றொரு பாண்டிய மன்னன் இருந்தான். அவன் அவைக் களத்தில் கோமாளியாக இருந்தவன் மதியழகன். அவன் நகைச்சுவை குன்றாமலே அவையோர் ஒவ்வொருவரையும் தாக்கித் தலையிறங்கச் செய்வது வழக்கம். ஒரு நாள் நாக்குத் தவறி அரசனையே அவன் இறக்கிப் பேசிவிட்டான். அரசன் சட்டென வெகுண்டு, அவனைக் கொலை செய்யும் படி ஆணையிட்டு விட்டான்.

எப்போதும் கடகடவென்று பேசும் விகடன் வாளா இருப்பது கண்டு, அரசன் அவனைச் சற்றுப் பேச வைத்துத் தணிவு செய்ய வேண்டும் என்றெண்ணி, “நீ எங் கோமாளி யாதலால், உனக்கு ஒரு வகையிற் பரிவு காட்டுகிறேன். நீ எந்த வழியாகச் சாக வேண்டுமென்று விரும்புகிறாயோ, அந்த வழியிலேயே சாகலாம். ஆகவே, உன் முடிவு உன் நாக்கையே பொறுத்துள்ளது” என்றான்.

மதியழகன் உடனே முகமலர்ந்து, “அப்படியாயின், அரசே! முதுமை வழியாக நான் சாகும் படி அருளல் வேண்டும்” என்று கூறினான்.

எதிர்பாராத இவ்விடையைக் கேட்டு அரசன் வியப்பும் மகிழ்ச்சியுங் கொண்டு சினம் ஆறினான். அதன்பின் அரசன், தான் பகையரசரிடம் செலுத்தும் வன்கண்மையை அந்நகைய ரசினிடம் எந்நாளும் காட்டுவதில்லை.

ஆக்கல் அரிது; அறிவுரை எளிது

கலைப்பயிற்சிக் கூடமொன்றின் அருகில், ஒரு சிலை எழுப்ப ஏற்பாடாயிற்று. கலையிலக்கணங்கற்ற பயிற்சி மாணவர் பலர் அதனைச் செய்யுங் கலைஞனிடம் சென்று, ‘கண் இப்படி இருத்தலாகாது, மூக்கு இப்படி இருத்தல் வேண்டும்’ என்று பலவாறாகத் தமது அறிவு நலத்தைக் காட்டினர். கலைஞன், அவர்கள் ஓயாத பஞ்சரிப்பைத் தவிர்க்கும் எண்ணத்துடன், “உங்கள் அனைவர் அறிவுரைகளையும் பின்பற்றியே நான் தொழிலாற்றப் போகின்றேன்” என்று கூறினான்.

அவ்வாறே அவன் ஒவ்வொருவரின் அறிவுரையையும் பொறுமையுடன் எழுதிவாங்கி அவையாவும் பொருந்துமாறு ஓர் உருவம் அமைத்தான். ஆனால், அதே நேரத்தில், பக்கத்தில் மறைவாக இன்னோர் உருவமும், தனது கலைப்பாங்கு முற்றும் புலப்படும்படி அவன் அமைத்துவைத்தான்.

உருக்களை அரங்கேற்றுகையில் அவன் இரண்டையும் திறந்து மக்கள்முன் காட்டி, “இது கலை இலக்கணப் புலவோர் அறிவுரையின் படி அமைந்தது, இஃது எனது கலைப் பாங்கின்படி அமைந்தது” என்று கூறினான்.

அறிவுரை தந்த அறிஞர்கள், தம் உரைகளின் பயனாய் அமைந்த அவருக்கத்தக்க உருவினைக் கண்டு வெட்கினார்கள்.

தன்னலம் பேணிய குரங்கு

ஒரு மாம்பழக்காரனிடம் இருந்த மாம்பழப் பைகளுள் ஒன்றை ஒரு குரங்கு பறித்துக் கொண்டு ஓடிவிட்டது. அதன் தோழர்களாகிய மற்றைக் குரங்குகள் அதில் பங்கு கொள்ளும் அவாவுடன் அதனைப் பின்பற்றி ஓடின.

தன்னிடமிருந்து எந்தக் குரங்கும் மாம்பழங்களைப் பறிக்க முடியாதபடி முதற்குரங்கு கிளைக்குக் கிளை தாவியோடிற்று. பறிக்க முயலாமல் அன்புடன் பழங்களைக் கேட்டுச் சுற்றிய குரங்குகளிடமும் அக்குரங்கு பரிவு காட்டாமல், அவற்றின் மீது தான் தின்ற பழங்களின் கொட்டையை வீசியெறிந்தது.

பின்பற்றிச் சூழ்ந்த குரங்குகள் மிகுதி ஆக ஆகக் குரங்கிற்கு ஓடவும் முடியவில்லை. கொட்டைகளை எல்லாம் எறிந்து விட்டபின் எறிய வேறு ஒன்றும் அகப்படவுமில்லை. ஆகவே அது முழு மாம்பழங்களையே எடுத்து எறிய வேண்டிய தாயிற்று. விரைவில் பழங்கள் அவ்வளவும் இங்ஙனஞ் செலவாய்ப் போயின. அதன் பின்புதான், பழங்களையும் இழந்து இனத்தவர் நட்பையும் தான் இழந்து விட்டது குரங்கிற்குத் தெரியவந்தது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

ஒரு மாது பிறவியிலே ஊமையாகவும் செவிடாகவும் இருந்தாள். அவளுக்கு முதற் குழந்தை பிறந்தபின், ஒரு நாள் குழந்தை தொட்டிலிற் கிடந்து உறங்கும் நேரம், அவள் ஒரு பெரிய பாறாங்கல்லுடன் தொட்டிலின் பக்கம் செல்வதை அண்டை அயலிலுள்ளவர்கள் கண்டு, அவள் பித்துப் பிடித்துக் குழந்தையைக் கொல்லப் போகிறாளோ என்று அலறி ஓடினர்.

ஆனால் அவள் தொட்டிலின் அருகில் சென்றதும் அக்கல்லைத் தலைக்குமேல் உயரத் தூக்கித் தடாலென்று நிலத்தின்மீது ஓங்கி எறிந்தாள். அவ்வொலி கேட்டுக் குழந்தை திடுக்கிட்டு விழித்தவுடன், அவள் அக்குழந்தையை எடுத்து வாரி அணைத்துக்கொண்டு அன்புக் கண்ணீர் விட்டு அழுதாள்.

தன்னைப்போலத் தன் குழந்தையும் செவிடாக இருத்தலாகாதே என்ற கவலையினால் அவள் செய்த தேர்வு அஃது என்று கண்டு, அயலார் அச்சம் நீங்கி அகன்றார்கள்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

பெரியார் ஒருவருக்கு அவருடைய நண்பர், அவர் பிறந்த நாள் விழாவைப் பாராட்டும் பொருட்டு இனிய பழவகைகளும் தின்பண்டங்களும் தம் சிறுவன் மூலம் அனுப்பி வைத்தார். சிறுவன் பெரியவர்களிடம் வணக்க ஒடுக்கமாக நடக்கப் பழகியவனாதலால், நெடுநேரம் அவர் அவனைப் பாராததுபோல இருந்தும் பொறுமையாகப் பழத் தட்டுடன் நின்றிருந்தான். கடைசியில் அவன் பொறுமையிழந்து, “ஐயா, என் தந்தை இப்பழத் தட்டைத் தங்களிடம் தரச்சொன்னார். பெற்றுக் கொள்ளுங்கள்.” என்றான். பெரியவர் அப்போது அவனைப் பார்த்து, “உன் தந்தை உனக்குக் கற்பித்துக் கொடுத்த வணக்கம் ஒடுக்கம் இவ்வளவுதானா? பெரியவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நான் காட்டுகிறேன். நீ எனது இடத்தில் இரு. நான் நடந்து கொள்வதைப் பார்” என்று கூறிவிட்டு வெளியிற் சென்றார்.

சிறிது நேரத்திற்குள் அவர் தட்டுடன் வந்து “ஐயா, அன்புகூர்ந்து இக்காணிக்கையை ஏற்றுக் கொண்டருளுங்கள்” என்றார். சிறுவன் உடனே அவர் வியக்கும் வண்ணம், “மிகவும் மகிழ்ச்சி இப்படி வந்து உட்கார் தம்பி. நீ மிகவும் தொந்தரவு எடுத்துக்கொண்டு விட்டாய். இதோ ஒரு பழமும் சில திண்பண்டங்களும் தின்கிறாயா?” என்றான்.

அவனுக்கு சிறுவர் நடந்து கொள்வது எப்படி என்று தாம் கற்பிக்கப்போக, அவன் பெரியோர் எப்படி நடப்பதென்று தமக்குக் கற்பித்துவிட்ட நயத்தை எண்ணி, அவர் சிறுவனைப் பாராட்டி மெச்சிக் கொண்டார்.

வாயுரை உதவியா, கையுறை உதவியா

1118 ஆம் ஆண்டு மலையாள நாட்டில் பஞ்சத்தால் துன்புற்ற மக்களுக்கு உதவிபுரியும்படி கூட்டப்பட்ட கூட்டம் ஒன்றில் இளைஞரும் மங்கையரும் பலர் முன்வந்து மலையாள மக்களின் துயரை விரித்துப் பேசினர். இன்னும் பலர் அவர்கள் மீது தமக்கு ஏற்பட்ட இரக்கத்தை வானளாவப் புகழ்ந்து கற்பனைக் கோட்டைகள் கட்டினர். இவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவி மேடையேறி நின்று, “என் நண்பர்களே, என்னிடம் இரக்கம் மிகுதியாக இல்லை. இதோ இவ்வளவுதான் இருக்கிறது.” என்று பத்து ரூபாத் தாள்கள் இரண்டினை எடுத்து மேடைப் பலகை மீது வைத்தாள்.

அதற்கு மேல் எல்லாரும் வெறும் பேச்சுப் பேச வெட்கித், தம்மாலானதைக் கொடுக்கத் தொடங்கினர். விரைவில் அக்கிழவியின் புண்ணியத்தால் ஒரு நல்ல தொகை சேர்ந்து மலையாளத்து ஏழை மக்களுக்கு உதவியாயிற்று.

முனிவினும் நல்குவர் மூதறிஞர்

சாளுக்க நகராகிய வாதாபியைக் கொள்ளையிட்ட பல்லவ வீரர்களுள் செங்கதிர்மாறன் என்றொரு பெருந்தகையாளன் இருந்தான். போரில் அவன், தன் மெய் முழுதும் காயமடைந்து விடாயால் வருந்தினான்.

அவன் தோழர்கள் போர்க் களத்திற்கு மிகவும் தொலைவிலிருந்து நறுநீர் கொணர்ந்தார்கள். அதை அவன் பருக நினைக்குமளவில் ஓர் ஏக்கக் குரல் கேட்டுத் திரும்பி நோக்கினான். சாளுக்க வீரனொருவன் விடாயினால் நெடுநேரம் விக்கி ஏங்குவது கண்டு, தனக்கு வந்த நீரை அவனுக்கே கொடுக்க முனைந்தான்.

ஆனால், நீரை எடுக்கத் திரும்பியதும் அச்சாளுக்கன். தன் கைவாளை அவன் முதுகுப் புறம் வீசினான். நல்ல வேளையாக சாளுக்கன் கையின் ஆற்றல் மிகவும் குன்றி யிருந்ததனால் செங்கதிர் மாறன் தப்பிப் பிழைத்தான்.

தன் உயிர் மறுத்து உதவி செய்த அவ்வள்ளலிடம் நன்றி கொன்ற சாளுக்கன் மீது அனைவரும் சீற்றங் கொண்டெழுந்தனர். செங்கதிர் மாறனும் சீற்றங்கொண்டான். ஆனால், அவன் பிறரைத் தடுத்து, “சாளுக்கன் எனக்குச் செய்த தீமைக்குத் தக்க தண்டனை நானே கொடுக்கிறேன்” என்று கூறினான்.

அதன்பின் அவன் அச்சாளுக்கனை நோக்கி, “நீ தூய வீரனா? நன்றிகொன்ற உனக்கு நான் நினைத்தபடி குடிக்க இருந்த நறுநீர் முழுமையும் தரக்கூடாது. இதோ பாதி நீர் மட்டும் தருகிறேன். குடித்துத் தொலை” என்றான்.

சீற்றத்திலும் ஈகையைக் குறைப்பதன்றி நிறுத்தாத அவன் இயற்கை அருட்குணங் கண்டு அச்சாளுக்கன் கூட மனம் மாறி அவனிடம் மீண்டும் நட்புக் கொண்டான்.

இடுக்கண் இன்பத்தின் பாதை

‘இடமறிந்து வாய்மை பகர்க’ என்னும் நெறி முறை மறந்து ஒரு குறிகாரன், ஓர் அரசன் கோள் வட்டப்படி அவனுக்கு வரும் தீமை ஒன்றை அறிந்து அவனிடம் கூறினான். அரசன், அஃது அவன் கோள் நூலிற் கண்டது என்று கொள்ளாமல், அவனைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டான்.

குறிகாரன் மலைப்படைந்து இன்னது செய்வதென்று அறியாது கலங்கினான். அப்போது அரசனுடைய விகடன் அவனுக்கு ஒரு வழி கூறினான். அதன்படி அரசனிடம் சென்று மிகவும் வணக்கமாக அடிபணிந்து, “அரசே, நான் ஓர் ஏழை. இறந்தால் வருந்துவதற்குக்கூட ஆளில்லை. நான் இறக்கச் சிறிதுந் தடையில்லை, ஆனால் என் இறப்புடன் இந்த நாட்டின் நிலைமையும் பிணைக்கப்பட்டிருக்கிறதே! அதனால்தான் கலங்குகின்றேன்” என்றான்.

அரசன், “உன் இறப்புக்கும் நாட்டிற்கும் அப்படி என்ன பிணைப்பு?” என்று கேட்டான்.

குறிகாரன், “அரசே! நான் பிறந்த நாளையும் கோளையும் அடுத்தே இந்நாட்டு மன்னராகிய தங்கள் நாளும் கோளும் இருக்கின்றன, என் வாழ் நாளுக்குமேல் சரியாக ஓராண்டு தங்கள் வாழ்நாள் மிகுதி உடையது, ஆகவே, என் முடிவு தங்கள் நலனைக் குறைத்தலாகாதே என்பதுதான் என் கவலை, இதையறிந்த என் நண்பர்களாகிய நாட்டு மக்களும் கவலைப்படுகின்றனர்” என்றான்.

குறிகாரன் எதிர்பார்த்தபடி அரசன் அவன் தண்டணையை நிறுத்திவிட்டான். அது மட்டுமன்று; அரண்மனை மருத்துவர் அரசனது உடல்நலத்தைப் பார்த்து வருவது போலவே குறிகாரன் உடல் நலத்தையும் பார்த்து வரவேண்டும் என்று அம்மருத்துவருக்கு உத்தரவாயிற்று. இதனாற் குறிகாரனுக்கு எத்தகைய குறைவுமில்லாமல் அரசியலிலிருந்து பொருள் உதவியும் கிடைத்து வந்தது.

கச்சணன் கண்ணாடி வாங்கப்போன கதை

கச்சணன் என்பவன் கல்வியில்லாதவன். அவன் ஒரு செல்வன் வீட்டில் தோட்டக்காரனாயிருந்தான் செல்வனுக்கு சற்றே வெள்ளெழுத்து. ஆகையால் அவன் கண்ணாடி போடாமல் வாசிக்க முடியாது. அதைக் கவனித்த கச்சணன், ’கண்ணாடி யிருப்பதனால்தான் இவர் வாசிக்கிறார், ஆகவே நாமும் கண்ணாடி அணிந்து கொண்டால் வாசிக்கலாம், என்று எண்ணினான்.

அதுமுதல் அவன், கடைத்தெரு வழியாகப் போகும்போதெல்லாம் கண்ணாடிக் கடைகளில் நுழைந்து பல கண்ணாடிகளையும் போட்டுப்போட்டுப் பார்த்து வருவான். ஒரு கண்ணாடியும் அவனுக்குப் பிடிக்காதது கண்டு சலிப்படைந்த கடைக்காரர், “என்ன ஐயா, உமக்கு ஒன்றும் பிடிக்கவில்லையா?” என்று கேட்டால் அவன், “ஒன்றாவது நல்லதாயில்லை, ஒன்றாலும் எழுத்துக்கள் வாசிக்க வரவில்லையே?” என்பான்.

பல தடவையும் இப்படிச் சொல்வது கண்டு கடையிலிருந்த ஒரு பெரியவர், “உங்களுக்கென்ன வாசிக்கவே தெரியாதோ?” என்றார். அப்போது தான் வந்தது கச்சணனுக்கு உண்மையான சீற்றம்! அவன் அவரை முறைத்துப் பார்தது, “பெரியவராயிருக்கிறீரே, உமக்கு இவ்வளவு தெரியாதா? வாசிக்கத் தெரிந்திருந்தால் நான் ஏன் கண்ணாடி வாங்கவர வேண்டும்?” என்றான்.

அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

‘தன் கேள்வி சரியான கேள்வி, அதனாலே தான் எல்லோரும் சிரித்தார்கள்’ என்று எண்ணிக் கொண்டு திரும்பி விட்டான் கச்சணன்.

நன்றியைக் காட்டும் முறை

ஒரு வணிகன் பஞ்சகாலத்தில் தனக்கு அறிமுகமான ஓர் ஏழை ஓவியக்காரனையும் அவன் குடும்பத்தாரையும் வைத்துப் பாதுகாத்தான்.

சிலகாலம் சென்றபின், ஓவியக்காரனுக்கு நற்காலம் திரும்பிற்று. நகரங்களிலும் அரசவைகளிலும் அவன் தீட்டிய படங்களுக்கு மதிப்பு ஏற்பட்டு அவனுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் மட்டற்ற அளவில் வந்து குவிந்தன. அப்போது அவன் தன்னைப் போற்றிய வணிகனிடம் சென்று அவனுக்கு ஒரு பெருந்தொகை வழங்கப்போனான்.

வணிகன் புன்முறுவல் பூத்து, “நண்பரே, உமது நல்லெண்ணம் கண்டு மகிழ்ச்சிகொள்ளுகிறேன். ஆனால் நீர் நன்றியறிவிக்கும் வழி இன்னதென்று அறியாததற்கு வருந்துகிறேன்.” என்றான்.

ஓவியக்காரன் வியப்புற்று, “ஒப்பற்ற வள்ளலே, நான் செய்த தவறு யாது?” என்றான்.

வணிகன், “நண்பரே, என்னை வள்ளல் என்கிறீரே, நான் உமக்குச் செய்தது உண்மையில் வண்மையானால் அதுபோன்ற வண்மைச்செயலை நீர் செய்தாலன்றோ நன்றியுடையவராவீர்” என்றான்.

ஓவியக்காரன் பின்னும் மலைப்புடன் நிற்பது கண்டு, வணிகன் தன் கருத்தை இன்னும் விளக்கி “நான் உமக்குச் செய்த நன்றி உம் ஒருவரை நினைத்துச் செய்ததன்று. மனித வகுப்பை எண்ணி, அதில் துன்புற்று நின்ற உமக்குச் செய்தது. நீர் நன்றியறிதல் காட்டுவதும் அம்மனித வகுப்புக்கு ஆதல் வேண்டும், எனக்கன்று நான் செய்த படியே துன்புற்றார்க்கு நீர் உதவினால் என் நன்றிக் கடன் தீரும்” என்றான்.

ஓவியக்காரன் “நன்றி என்பது ஆளுக்கு ஆள் பரிமாறிக்கொள்ளும் வாணிபமன்று, பண்புக்குப் பண்பு ஈடு செலுத்தும் அருளுடைமை” என்று உணர்ந்தான்.

வாய்மையும் வண்மையும்

உள்ளத்திற் பட்டதை உரைக்க வாய்மை வேண்டும். ஆனால் அதனை ஏற்று நன்கு மதிக்க வண்மையும் (தியாகமும்) இன்றியமையாதது.

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் தமிழ்நாட்டிற்கு வடக்கிலும் மிகு தொலைவுசென்று பகைவரை வென்றடக்கித் தன் கொடி நிழலை விரிவுபடுத்தி வந்தான்.

பகைவர் நாடுகளை வென்றபின், ‘தன்போர் வீரர் அந்நாட்டு மக்களுள் எவர் உடைமையையும் கொள்ளையிடக் கூடாது’ என்று அவன் ஆணையிட்டிருந்தான்.

ஆமல்லன் என்ற வீரன் ஒரு வீட்டிலிருந்த வெல்லப்பொதி ஒன்றைப் பறித்துக் கொண்டான். அரசன் அவனை வெறிக்கப் பார்த்து, “நீ எப்படி உணர்வின்றி என் ஆணையை மீறி அவன் உடைமையை கைக்கொண்டாய்?” என்று கேட்டான்.

ஆமல்லன், “அரசே, தாம் இந்நாட்டு மன்னர்களின் உயிரையும் உடைமையையும் மானத்தையும் கொள்ளையிடுகின்றீரே. நான் ஒரு வெல்லப் பொதிமட்டும் எடுத்தது குற்றம் என்று சொல்கின்றீரே!”என்றான்.

அரசன் சினம் மாறிப் புன்முறுவல் கொண்டான். பொருள் பறிபோன ஆளைக் கூப்பிட்டு அவனுக்கு நாலு மடங்காகப் பொருள் கொடுத்து அனுப்பிவிட்டு ஆமல்லனை அழைத்து, அன்புடன் அணைத்துக்கொண்டு, “வீரரே! உமது வாய்மையுரை கேட்டு மகிழ்ந்தேன். ஆயினும் உமக்கு நான் நேற்று மறு மொழி கூறாதது உமது வாய்மையை மதிக்கவேயாகும். நாம் வேற்று நாட்டு மன்னர்களின் உயிரையும் உடைமையையும் பிறவற்றையும் கொள்ளை கொள்வது நமக்காகவா? மேலும், நமக்கல்லாத இச்செயலில் நம் உயிர், உடைமை, மானம் அனைத்தையும் நாம் பணையம் வைத்தன்றோ ஆடுகின்றோம்” என்றான்.

வாய்மை மிக்கவீரன், வண்மை மிக்க அரசனது பெருமையறிந்து அடிபணிந்து, அகங்குழைந்து மன்னிப்புக் கேட்டான்.

நரியும் சேவலும்

ஒரு நாள் ஒரு நரி தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு சேவற்கோழியைக் கண்டது. தான் ஓடிப் பிடிப்பதற்குள் சேவல் ஓடிவிடும் என்று அதற்குத் தெரியும். ஆகவே சூழ்ச்சியால் கோழியைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அது கோழியினிடம் “தம்பி சேவலே, செய்தி தெரியுமா உனக்கு?”என்றது.

சேவல், பறந்து தப்ப இடமிருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே, “என்ன செய்தி, பொல்லாத நரியண்ணரே!”என்றது.

“இனி நமக்கிடையே எத்தகைய பொல்லாங்கும் இல்லை. விலங்குகள் எல்லாம் சேர்ந்து ’இனி ஒருவரை ஒருவர் கொல்லவோ தின்னவோ கூடாது. எல்லாரும் சைவமாய் ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று தீர்மானித்தன. அதனைக் கொண்டாட எல்லாரும் விழா அயர்கின்றனர். நாமும் விழாக் கொண்டாடலாம், வா,” என்றது.

சேவலுக்கு நரியின் சூழ்ச்சி விளங்கிவிட்டது. ஆகவே அது, “அப்படியா, மிகவும் மகிழ்ச்சியே. ஆனால் நமது விருந்திற்கு இன்னொரு பங்காளியும் வருகிறான். அதோ நாயண்ணா வருகிறான் பார்.” என்றது. உடனே நரி ஓடத்தொடங்கிற்று.

"அண்ணா, முன்பு விலங்குகளுக்குள் பொல்லாங்கு எல்லாம் தீர்ந்துவிட்டது என்றீர்கள். இப்போது நீங்களே ஓடுகின்றீர்களே, அஃது ஏன்? என்று கேட்டுச் சேவல் ஏளனம் செய்தது.

எதிலிருந்து பாதுகாப்பு?

ஒரு பாதுகாப்புப் பொருளகத்திற்கு ஆட்கள் சேர்க்கப் பலர் ‘ஆட்பேர்’ அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுள் ‘காலடி’ என்பான் ஒருவன் இருந்தான். அவன் வாயடியிலும், பிறரை நயமாகப் பேசி வலியுறுத்துவதிலும் திறமை வாய்ந்தவன். ஆனால் அவன் பெரும்பாலும் எதிரியின் நிலைமையைக் கவனிப்பதோ, அவன் நேரத்தையும் வேலைகளையும் மதிப்பதோ இல்லை.

ஒரு நாள் தமது வேலையின் பொருட்டாக ஒருவர் விரைந்து தம் அலுவலகம் போய்க் கொண்டிருந்தார். காலடி பலகால் அவரைத் தன் பொருளகத்திற்கு உறுப்பினனாகச்

சேர்க்க முயன்றும், அவர் நாளை நாளை என்று கடத்தி வந்தார். இன்று எப்படியாவது அவரை இழுத்துவைத்துத் தன் நோக்கம் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அவன் தன் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டான். ஆகவே அவரைப் புன்முறுவலுடன் வலுவந்தமாகத் தகது நிலையத்திற்கு இழுத்து வந்து, ‘எப்படியாவது இன்று என் கருத்திற்கு இணங்கியாக வேண்டும்’ என்றான்.

அப்பெரியவர் ஏதோ எண்ணியவராய், “சரி, உம் அலுவலகத் தலைவரை இங்கே அழைத்துக் கொண்டு வருக!” என்றார்.

அலுவலகத்தில் சேரத்தான் தலைவரை அழைக்கிறார் என்று எண்ணிக்கொண்டு, காலடி மகிழ்ச்சியுடன் ஓடித் தன் தலைவரை அழைத்துக் கொண்டு வந்தான். தலைவரும் வந்தவரை வணங்கி முகமெலாம் புன்முறுவல் கொண்டு சேர்ப்புத்தாளை ஏந்தி, “எங்கள் அலவலகத்தில் எல்லா வகையான பாதுகாப்புக் களும் கிடைக்கும். உயிர்ப் பாதுகாப்பு வெள்ளப் பாதுகாப்பு நெருப்புப் பாதுகாப்பு ஆகப் பல பாதுகாப்புகளும் கிடைக்கும். தமக்கு எதிலிருந்து பாதுகாப்பு வேண்டும்?” என்றார்.

பெரியார், “எனக்கு வேண்டும் பாதுகாப்பு ஒன்றுதான். அது தங்கள் ’ஆட்பே’ரிடமிருந்து வேண்டும் பாதுகாப்புத்தான்,” என்று கூறிவிட்டுச் சரேலென்று வெளியேறி விட்டார்.

சிலந்தியின் படிப்பினை

ஆறுமுறை பகையரசரை எதிர்த்துப் போராடியும் வெற்றி பெறாமல் மனமுடைந்த அரசனொருவன், ஒரு குகையில் ஒளிந்து நினைவிலாழ்ந்திருந்தான்.

அந்த நேரத்தில் ஒரு சிலந்தி குகையின் ஒரு சுவரிலிருந்து மறு சுவருக்குத் தன் நூலைப் பறக்க விட்டு மிதந்து செல்ல முயன்று கொண்டிருந்தது. ஆறு தடவை முயன்றும் அது தோல்வியே அடைந்தது கண்டு. அரசன் அதன் செயலில் முற்றும் ஈடுபட்டு, “இப்போது அதன் நிலையும் என் நிலையும் ஒன்றே. அது என்ன செய்கிறது என்று பார்க்கிறேன்.” என்று எண்ணிக் கொண்டான்.

மாந்தரின் அறிவுக்கு இடமில்லாத அச்சிலந்தியினிடத்தில் மாந்தரின் மனமறிவுக்கும் ஒரு சற்றும் இடமில்லை என்றே தோற்றிற்று. அத சற்றும் அயர்வடையாமல் மீண்டும் பொறுமையுடன் சுவர் ஏறித் தாவிற்று. இம்முறை அதற்கு வெற்றியும் கிடைத்தது.

அரசனுக்கு இஃது ஒரு பெரும் படிப்பினை ஆயிற்று. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற உறுதியுடன் மறுமுறையும் போரில் வெற்றி பெற்றான்.

உண்மைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கடமை மயக்கம் ஏற்படுங் காலத்தில் நடுநிலை கண்டு ஒழுகுந் திறம் வாய்ந்தவர். ‘செயற்கரிய செய்யும்’ ஒரு சிலரே.

நடு நிலை

கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஃபிரான்சு நாட்டில் நெப்பொலியன் ஒரு பேரரசனாக விளங்கினான். அவன் பெரும்பாலும் அந்நாளைய உலகத்தை முற்றும் வென்றடக்கிய வீரன். அவன் குடிகளும் படை வீரரும் அவனைத் தந்தையென நினைத்து மதிப்பும் அன்புங்கொண்டு அவனுக்குத் துணிபுரிந்து வந்தனர். அன்பினால் மதிப்புக் கெடுவதும், மதிப்பினால் அன்பு குறைவதும் உலக இயற்கை. நெப்போலியன் போற்றத் தக்க வகையில் இரண்டும் கெடாதபடி பார்த்து வந்தான்.

ஒரு நாள் நெப்போலியன் தெருவழியே போய்க்கொண்டிருந்தபோது போரில் நற்பெயர் வாங்கிய படை வீரன் ஒருவன் அவனைப் பார்த்து, ’ஐயனே! இங்கே நான் ஒரு பந்தயம் வைத்துவிட்டேன். நான் வெற்றிலை போடும்போது தங்கள் உடை வாளால் பாக்கு வெட்டிக்கொண்டால் ஒரு நூறு பொன் பெறுவது என்றும் இல்லாவிட்டால் நூறுபொன் கொடுப்பது என்றும் பேசி இருக்கிறேன். நட்புரிமையில் சொல்லிவிட்ட என் சொல்லைப் பாதுகாக்க வேண்டும்" என்றான்.

நெப்பொலியன், “நான் என் நட்புரிமையையும் பாதுகாக்க வேண்டும், அரசுரிமையையும் பாதுகாக்க வேண்டும். நீ பந்தயமாக வைத்துக் கிடைக்கும் பணத்தின் பதின்மடங்கு உனக்குத் தருகிறேன். அன்றியும் பந்தயம் வைத்த உன் நண்பரும் நீயும் என் பெயரால் அரசமாளிகையில் விருந்தயர்க!” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

யார் பெரியவர்

காற்றுக்கும் பகலவனுக்கும் இடையே ஒரு சொற்போர் எழுந்தது. அவர்கள் இருவரிடையே யார் பெரியவர் என்றறிவதே அதன் நோக்கம்.

“அதோ சாலை வழியே செல்லும் மனிதன் போர்த்துச் செல்லும் போர்வையை அகற்றுபவர் யாரோ அவரே பெரியவர்” என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

காற்றுத் தன் வன்மையையெல்லாம் சேர்த்து அடித்தது. மனிதன் தன்னாலியன்ற மட்டும் இறுக்கமாகப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டான்.

பகலவன் சற்றே காய்ந்தான். மனிதன் உடனே போர்வையை அகற்றினான்.

பகலவன் மென் கதிர்களுக்குக் காற்றின் பெருவீச்சுத் தோற்றது.

என் பொருள்; அதை என்ன செய்தால் என்ன?

குடியானவன் ஒருவன் ஓர் எருதை நையப்புடைத்தக் கொண்டிருந்தான். மாற்றுருவில் நாடு சுற்றிப்பார்வையிட்டு வந்த அந்நாட்டு இளவரசன் எருதின் மேல் மனமிரங்கிக் குடியான வனைப் பார்த்து “ஏனப்பா இந்த எருதை இப்படி வருத்துகிறாய்” என்று கேட்டான்.

குடியானவன் அவனை அசட்டையாகப் பார்த்து “ஏன் ஐயா, உம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறது தானே! எருது என் பொருள், அதை நான் என்ன செய்தால் உமக்கென்ன?” என்றான்.

இளவரசன் மனம் மிகவும் புண்பட்டது. உடனே அவன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த நீண்ட சவுக்கை எடுத்துக் குடியானவன் முதுகில் விளாசினான். குடியானவன், ’ஐயோ, அப்பா! ஏன் என்னை இப்படி முறையின்றி அடிக்கிறாய்?" என்றான்.

இளவரசன், “அடே, சவுக்கு என் பொருள். அதை நான் என்ன செய்தால் உனக்கென்ன?” என்றான்.

குடியானவன் தன் பிழையறிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

காக்கைகள் கணக்கறிவு

ஒரு குடியானவன் தன் வயல்களில் காக்கைகள் வராமல் காக்க வேண்டுமென்று பற்பல சூழ்ச்சிகள் செய்தான். அவற்றைச் சுடத் துப்பாக்கியுடன் சென்றால் அவை அத்துப்பாக்கி தொலைவிடம் செல்லும்வரை வருவதில்லை. ஆகவே அங்கே குடில் கட்டி அதில் துப்பாக்கியுடன் ஒளிந்திருந்து பார்த்தான். அவனும் துப்பாக்கியும் வெளிச் செல்வதைப் பார்த்தன்றிக் காக்கைகள் அண்டவில்லை.

“ஐயறிவினும் குறைபட்டவையாகிய இக்காக்கைகள் நம்முடன் போட்டியிடுவதா? எப்படி யாவது அவற்றை ஏமாற்றுகிறேன்” என்று அவன் வரிந்து கட்டிக்கொண்டு முனைந்தான்.

தன்னுடன் துப்பாக்கியோடு இன்னொருவனைக் குடிலுக்குட் கூட்டிச் சென்று, அவனைத் துப்பாக்கியுடன் வெளியே போகவிட்டு ஒளிந்திருந்து பார்த்தான். காக்கைகள் இரண்டுபேர் உட்சென்றதைப் பார்த்ததால், இன்னொருவன் வெளியே போகட்டும் என்று காத்திருந்தன.

குடியானவனுக்குக் கடுஞ்சினம் பொத்துக்கொண்டு வந்தது. அவன் ‘இக் காக்கைகளுக்கு எண்ணக்கூடத் தெரியும் போலிருக்கிறதே! பார்ப்போம். எதுவரை அவற்றின் கணக்குச் செல்லும்’ என்று எண்ணியவனாய் மறுநாள் மற்றும் இருவருடன் குடிலுக்குட் சென்று இருவரையும் வெளியே அனுப்பிவிட்டான். காகங்கள் அப்போதும் மூன்றாம் மனிதனுக்காகக் காத்திருந்தன.

அடுத்தநாள் நால்வர் உள்ளிருந்துகொண்டு மூவர் வெளியேறினர். காகங்கள் சற்று ஏமாறின ஒரு காகம் சுடப்பட்டு வீழ்ந்தது. அது முதல் காகங்கள் அப்பக்கம் நாடவில்லை.

குடியானவன் வீம்புடன், “காக்கைகளின் கணக்கு அறிவு இவ்வளவுதான். அவற்றிற்கு மூன்றுக்கு மேல் எண்ணத் தெரியாது என்பது இப்போதுதான் தெரிய வருகிறது” என்றான்.

பொறுமைமிக்க சிறுமி

ஓர் ஊரில் பஞ்சம் நேர்ந்தது. பெரியவர்களும் சிறியவர்களும் வாடினர்.

செல்வனொருவன், அப்பஞ்சம் தீரும்வரை ஒவ்வொரு நாளும் ஒரு கூடை நிறைய அப்பங்கள் சுட்டு, ஊரிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் ஆளுக்கொன்றாய்க் கொடுக்க ஏற்பாடு செய்தான்.

பசியால் வாடிய சிறுவரும் சிறுமியரும், நீ முந்தி, நான் முந்தி என்று மோதிக்கொண்டு வந்து கூடுமானவரை பெரியதாகப் பார்த்து ஒவ்வோர் அப்பம் எடுத்துக்கொண்டு போனார்கள். முதலில் எடுத்தவர்களுக்குப் மிகப்பெரிய அப்பமும் வரவரச் சிறிய அப்பங்களும் கிடைத்தன. கூட்டத்துடன் மோதாமல் தனித்து ஒதுங்கிப் பொறுமையுடன் நின்ற ஒரு சிறுமிக்கு இறுதியில் மீந்திருந்த மிக மிகச் சிறிதான ஓர் அப்பமே கிடைத்தது.

நாள்தோறும் அச்சிறுமி இப்படியே காத்திருந்து கடைசிச் சிறு அப்பத்தை எடுத்துக்கொண்டு போவாள். அதனோடு பிற சிறுவரைப்போல் அதை அங்கேயே தின்று விடாது, அவள் அதனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு போவாள். செல்வன் இதனை நன்கு கவனித்து அவள் மீது பரிவு கொண்டான்.

சிறுமி அக்கடைசி அப்பத்தைக்கொண்டு போய் மெலிந்து வாடும் தன் தாய்க்குக் கொடுத்து, அவள் வற்புறுத்திக் கொடுக்கும் சிறு துண்டை மட்டிலுமே தான் தின்று வந்தாள்.

ஒருநாள் வழக்கம்போல் அச்சிறு அப்பத்தை வீட்டிற்குக் கொண்டுபோய்த் தாய் முன் அதைப் பிட்டுப் பார்க்கும்போது உள்ளே யிருந்து ஒரு பொன் காசு விழுந்தது.

வறியளாயினும் மன நிறைவும் நேர்மையும் உடைய அச்சிறுமியின் தாய், அதனை உடனே செல்வரிடம் திருப்பிக் கொடுக்கும்படி கூறினாள். செல்வன் அதனைக் கண்டதும் முன்னிலும் பன் மடங்கு மகிழ்ச்சியும் வியப்பு மடைந்தான்.

“எல்லாப் பிள்ளைகளும் தம் பசியினால் அப்பத்தை உடனே தின்றுவிட நீ மட்டும் ஏன் கொண்டுபோகிறாய்?” என்று அச்செல்வன் கேட்டான்.

அதன் காரணம் அறிந்த போது அவன் உள்ளம் முன்னிலும் கனிவுற்றது. அவன் அப்பொற்காசை அவளுக்கே கொடுத்ததோடன்றி நாள்தோறும் அப்பஞ்சம் தீரும்வரை ஒவ்வொரு காசு அவள் வீட்டிற்கு அனுப்பிவர ஏற்பாடுஞ் செய்தான்.

சிறுமியும் தாயும் அதனைத் தமக்கெனப் பெற்றுக் கொள்ளாமல் ஏழைகளின் பொருட்டுப் பெற்றுத் தம்மாலியன்ற அளவு ஏழைகட்கு அதனால் உணவிட்டு வந்தனர்.

தந்தையின் உள்ளம்

சாளுக்க அரசனொருவன் பாண்டியருடன் செய்த சண்டை யொன்றில் தன் ஒரே புதல்வனை இழந்தான். பாண்டி நாட்டினரிடையே அவன் சிறை பிடித்த வீரருள் ஒருவன், கிட்டத்தட்ட தன் மகனை யொத்த அகவையும் சாயலும் உடையவனாய் இருப்பது கண்டு, அவனைத் தன் மகனாகக் கொண்டு போற்றிவந்தான்.

சில ஆண்டுகள் கழிந்தபின் சோழ அரசனும் பல்லவ அரசனும் சாளுக்க நாட்டின்மீது படையெடுத்தனர். அவர்களுடன் சண்டை செய்யப் பாண்டி நாட்டரசனும் தன் படைகளை உதவியாக அனுப்பியிருந்தான். இருபுறப் படைகளும் நெருங்கி வந்து போர் புரிவதற்காகப் பாசறைகள் அமைத்துக் காத்து நின்றன. அப்பொழுது முழு நிலாக்காலமானதால் சாளுக்க அரசன், பாசறைக்கு வெளியில் வந்து உலாவிக் கொண்டிருந்தான். அவன் காதுகளில் தமிழ்ப்படைகளின் போர் ஆரவாரமும், போர் வீரமிக்க பாடல்களின் இனிய பண்களும் தென்றல் காற்றுடன் கலந்து வந்து இடையிடையே மோதின.

திடுமென அரசன் ஏதோ நினைத்தவனாய்ப் பாண்டிய வீரனை அழைத்து வரும்படி ஏவினான். ‘அரசனுக்கு யாது பிழை செய்துவிட்டோமோ?’ என்ற அச்சத்துடன் வீரன் அவன் முன் வந்து நின்றான்.

அரசன் அவனை நோக்கி, “மைந்தா, நான் இதுகாறும் உன்னை அன்புடன் பேணி வந்திருக்கிறேன். இப்போது என் கேள்வி ஒன்றிற்கு விடை கூறுக! உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?”

வீரன் - ஆம், ஐயனே!

அரசன்- உனக்கு உடன் பிறந்தார் உண்டல்லவா?

வீரன் - அத்தகைய நற்பேறு எனக்கில்லை ஐயனே! என் தந்தைக்குப் புதல்வன் நான் ஒருவனே, புதல்வியும் வேறில்லை.

இதைக் கேட்டதும், அரசன் பெருமூச்சுவிட்டு “அதோ பக்கத்தில் உன் நாட்டுப் படைஞர் பாடியாடி இன்புறுகின்றனர். அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டால் எளிதில் நீ உன் பெற்றோரிடம் சென்று சேரலாம்,” என்று நாத் தழுதழுப்பக் கூறினான்.

வீரனும் பிறரும் ஒன்றும் தோன்றாமல் திகைத்தனர்.

அரசன், “மைந்தனே! உன்னை ஒத்த மைந்தனொருவனை இழந்த பின் எனக்கு உலகில் எதிலுமே இன்பமில்லாமல் போயிற்று. போரில் எத்தனை வெற்றி கிட்டினாலும் என்னளவில் இனி மன நிறைவேற்படுவதற்கில்லை. என் போன்ற அரசர் எத்தனையோ பேருடைய வாழ்க்கைகளை இங்ஙனம் எளிதில் வெறுமையாக்கிவிட முடியும். ஆனால் உன்னை உன் பெற்றோரிடம் அனுப்புவதன் மூலம் என் துயர் தீராவிடினும் இன்னொருவர் துயரையாவது குறைத்தவனாவேன்” என்றான்.

அரசன் நல்லெண்ணங் கண்டு, கனிவும் நன்றியும் உடையனாய்த் தமிழ் வீரன் அவனை வணங்கி, “தங்கள் தந்தை யுள்ளத்திற்கு இறைவன் நிறைவளிப்பானாக! என் தாய் தந்தையரை இழந்த பின்பும் தந்தையைத் தந்த தந்தையாகிய உம்மை மறவேன்” என்று கூறித் தன் நாட்டுக்கு விடை கொண்டு சென்றான்.

உலைவகற்றிய ஊசி

போலந்து நாட்டுப் பெருமகன் ஒருவன் ரஷ்யப்பேரரசனால் பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையில் இராப்பகல், வாரமென்றும் திங்களென்றும் வரையறையின்றி இருந்ததால் அவனுக்கு நேரம் போவது அரிதாயிருந்தது. அதனிடையே தன் பழங் கவலைகளையே எண்ணி எண்ணி, அவன் மனம் மிகவும் உளைந்து பித்துப் பிடித்துவிடும் போலிருந்தது. அச்சமயம் அவனுக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றிற்று. அவன் சட்டையில்அவன் மனைவி துணியினால் புனைந்த மலரொன்று குண்டூசிகளால் குத்தி வைக்கப்பட்டிருந்தது. பெருமகன் அதனைக் கழற்றி அவ்வூசிகளை இருளடர்ந்த அவ்வறையில் வீசி எறிந்தான். பின் அவற்றைத் தடவித் தடவிப் பார்த்து எடுக்கலானான். வெளிச்சத்திலேயே கண்ணுக்குத் தெரிவது அரிதான அவ்வூசிகளை இருட்டில் தேடி எடுக்க நெடுநேரம் - சிலசமயம் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஆயின. அவ்வேலையால் சோர்ந்த போது அயர்ந்து உறங்கி மீண்டும் அவன் அதே வேலையில் முனைவான்.

இவ்வகையில் ஆண்டுகள் பல சென்றன. ஒரு போரில் போலந்து மக்கள் வெற்றியடையவே அவன் விடுதலை பெற்று மனைவி மக்களுடன் சென்று சேர்ந்தான். அவன் தன் சட்டையில் குத்தி வைத்திருந்த நாலு குண்டூசிகளும் தனக்கு அளித்த பயனைக் கூறக்கேட்ட அவன் மனைவி அவற்றைத் தன் கழுத்தில் அணிந்த பதக்கம் ஒன்றில் பன்மணிகளுக்கு நடுவில் பதிப்பித்து அணிந்து வந்தாள். கணவன் அமைதி காத்த அவ்வூசிகள் அவளுக்கு, அவன் உயிர் காக்கப்பட்ட அருமையை நன்கு நினைவூட்டும் நன்மணிகளாயமைந்தன.

சிறுமியின் அறிவுத்திறம்

ஒரு தொழிற்சாலையின் உயர்ந்த தூபி ஒன்றைக் கட்டிய தொழிலாளர். அது கட்டி முடிந்தவுடன் அதனுச்சியி லிருந்து உருளையிட்டிறக்கப்பட்ட கயிற்றேணியின் வழியாக இறங்கினர். ஆனால் நினைவு மாறாட்டத்தால் கடைசி மனிதன் இறங்கு முன்பே கீழ் இருந்த வேலையாள் உருளையினின்றும் நூலேணியைக் கீழே வாங்கிவிட்டபடியால், பல பனை உயர மிருந்த கோபுரத்தினுச்சியில் தன்னந்தனியே நின்ற அக்கடைசி மனிதன் இன்னது செய்வதென்றறியாது விழித்தான். அவன் தோழர்கள் அடியில் நின்று அவனினும் பன்மடங்கு மனங்கலங்கித் திகைத்து நின்றனர்.

உச்சியில் நின்ற தொழிலாளனுடைய சிறுமி இதனைக்கேட்டாள். பெரியவர்கள் எல்லாருக்கும் தோன்றாத எண்ணமொன்று அவளுக்குத் தோன்றிற்று. அவள் கோபுரத்தின் அடிப்பாகம் சென்று தந்தையைக் கூவியழைத்தாள். தந்தை அவள் பக்கம் பார்த்ததும் அவள் தன் மேலாடையை எடுத்துக் கிழித்து நீளமாக முடிந்து காட்டி இது போல் உன் தலைப்பாகையைக் கிழித்துக் கீழே தொங்கவிடு என்றாள். தொழிலாளிக்கு முதலில் அது எதற்காக என்று விளங்காவிட்டாலும் செயலற்ற நிலையில் ஏதேனும் செய்வோம் என்று அங்ஙனமே செய்தான்.

சிறுமி அதன் கீழ் நுனியில் கனத்த நூல்கயிற்று உருண்டையைச் சுற்றி அதனை இழுக்கும் படி கூறினாள். பின் நூல் கயிற்றின் அடியில் பெருங் கயிற்றையும் அதனடியில் நூலேணியையும் கட்டினாள். தொழிலாளிக்கும் கீழிருந்த அவன் தோழர்களுக்கும் இப்போதுதான் சிறுமியின் நுண்ணறிவு விளங்கிற்று. தொழிலாளி நூலேணியை உருளையிலிட்டுக் கட்டிக் கீழே இறங்கித் தன் சிறு புதல்வியை மகிழ்ச்சியுடன் எடுத்து வாரி யணைத்துக் கொண்டான்.

குறைகுடம் கூத்தாடும்

சோழப் பேரரசனாகிய இராசராசன், தஞ்சைப் பெருங்கோயில் கட்டுவதில் பேரூக்கம் காட்டி வந்தான். முன்னமே குறிப்பிட்ட நல்ஓரையுள், அதனை முடிக்கும்படி வேலையை விரைவுபடுத்த வேண்டுமென்று அவன் திருப்பணி மேலாட்களுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தான்.

வேலைக்கு எத்தகைய குந்தகமுமில்லாமலேயே அதனைப் பார்வையிட விரும்பிப் பேரரசன் யாதோர் ஆரவாரமுமின்றிப் பொது வழிப்போக்கன் போன்ற உடையுடன் ஒற்றை மாட்டு வண்டியிலேறிக் கோயிற்பக்கம் வந்தான்.

யாரோ வெளியூரான் கோயிலுக்கு வந்திருப்பதாக எண்ணி, வேலையாட்கள் தங்கள் வழக்கமான வேலையிலீடுபட்ட வண்ணமாயிருந்தனர்.

கோயிலின் ஒருபுறம், பெரிய உத்தரக் கல்லொன்றைச் சுவர்மேல் ஏற்றவேண்டி யிருந்தது நூற்றுக் கணக்கானவர்கள் தோள் கொடுத்தும் அதை சுற்றிக் கட்டிய கயிறுகளை உருளையிட்டு இழுத்துங்கூடக், கல் மிகவும் பளுவாயிருந்ததனால் உயர்த்த முடியாது சற்றுச் சோர்வடைந்தனர். அத் தொகுதியின் மேலாள், “சீ, சோற்றாண்டிகளா முழு மூச்சுடன் தூக்குகிறீர்களா என்ன?” என்று தொலைவில் நின்று கூவிக் கொண்டிருந்தான்.

பேரரசன் மேலாளை நோக்கி, “ஐய! தாங்களும் சென்று கைகொடுத்து ஊக்கப்படாதா?” என்றான்.

மேலாள் திடுக்கிட்டு அரசனை ஏற இறங்கப் பார்த்து, “என்ன ஐயா! உமக்கு, நான் மேலாள் என்பது தெரியவில்லையோ?” என்று இறுமாப்புடன் கேட்டான்.

அரசன் “தங்களை அறியாது கூறிவிட்டேன். ஐயனே! பொறுத்தருள்க” என்ற கூறிவிட்டுத் தானே வண்டியிலிருந்து இறங்கி வேலையாட்களுடன் தோள்கொடுத்து ஊக்கினான். பார்வைக்குப் பெருஞ்செல்வர்போல் தோன்றிய அவரது முயற்சி கண்டு அனைவரும் முழு முயற்சியிலீடுபட்டுக் கல்லைத் தூக்கிவிட்டனர்.

மறுநாள் மேலாளுக்கு அரசனிடமிருந்து வந்த ஆணைச் சீட்டில், “இனித் திருப்பணிக்கு ஆள் போதாதிருந்தால், அரசருக்குச் சொல்லியனுப்புக!”என்ற வாசகத்தைக் கண்ட மேலாளது உடல் எண்சாணும் ஒரு சாணாகக் குறுகிற்று. தன் இறுமாப்பின் சிறுமையையும் அரசனின் எளிமையையும் எண்ணி, அவன் மனநொந்து அன்றுமுதல் திருப்பணியில், தானே நேரிடையாக ஊக்கங் காட்டி வேலையாட்களுக்கு எழுச்சி தந்தான்.

அறிவும் அறியாமையும்

நாகரிகம் மிக்க நாடுகளில் கூடக் கல்வியறிவு குறைந்த மக்கள் தம் அறிவுக்கெட்டாதவற்றை மாயம் என்றும், மந்திரம் என்றும், தெய்வீகமென்றும் நம்பி அல்லலுறுகின்றனர். இந்நம்பிக்கையால் புதிய பொருள்களை அறியும் ஆராய்ச்சி யறிவைப் பெறாது அவர்கள் அறியாமைச் சேற்றிலேயே அழுந்திக்கிடக்க நேருகிறது.

உலக நாகரிகப்படியில் இன்னும மிகத்தாழ்ந்த படியிலேயே இருக்கும் தென்கடல் பகுதியிலுள்ள மக்களைப் பற்றிய கீழ்வரும் கதை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சமயப் பணியி லீடுபட்ட ஆங்கிலப் பெரியார் ஒருவர், அப்பணியை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட தென்கடல் தீவுகளுள் ஒன்றில் மனைவியாருடன் சென்று தங்கியிருந்தார்.

ஒரு நாள் பக்கத்தூருக்கு வேலையாகச் செல்லும் போது அவர் தம்முடன் தன் பணப்பையை எடுத்து வர மறந்துவிட்டார். அது நினைவிற்கு வந்ததும், அவர் அங்கே கிடந்த ஓட்டுத் துண்டொன்றை எடுத்துச் சுண்ணாம்புக் கட்டியால் மனைவிக்கு அதன்மீது ஒரு குறிப்பெழுதி அங்கிருந்த ஒரு குடியானவனை அழைத்து, “இதனை என் மனையாட்டியிடம் கொடுத்து, அவள் தருவதை வாங்கிவா” என்றார்.

குடியானவன் “என்ன வேண்டுமென்று அவளிடம் சொல்லவேண்டாமா?” என்றான்.

பெரியார் : நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவள் தருவதை வாங்கிவா.

எழுத்தறிவு அந்நாட்டார் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. ஆகவே, குடியானவன், “இது என்ன? வேண்டா வேலையாயிருக்கிறது! ஓர் ஓட்டை இத்தனை தொலைவிணில் சுமந்து செல்லச் சொல்லுகிறாரே இவர்!” என்று எண்ணினான்.

ஆனால், வீட்டில் பெரியாரின் மனையாட்டியிடம் அவ்வோட்டுத் துண்டைத் தந்ததே அவள் அதைப் பார்த்துவிட்டு விரும்பிய பொருளை எடுத்துக் கொடுத்துவிட்டாள். வியப்புடன் அவன், “அம்மா, ஐயாவுக்கு வேண்டிய பொருள் இன்னதென்று நான் சொல்லாமல் நீங்க எப்படி அறிந்தீர்கள்?” என்றான்.

அவள் சிரித்துக்கொண்டே, “நீ சொல்லாவிட்டாலும் ஓடுதான் சொல்லிற்றே!” என்றாள்.

குடியானவன் அவள் சொல்லை அப்படியே நம்பி விட்டான். அம்மையார் எறிந்த ஓட்டை அவன் தலைமேற்கொண்டு எல்லாரிடமும், “ஆங்கிலேயர் எப்படி உலகை ஆளுகிறார்கள் தெரியுமா? அவர்களிடம் தெய்வசித்து இருக்கிறது. அவர்கள் அச்சித்தினால் ஓட்டைக்கூடப் பேச வைக்கிறார்கள்” என்று கூறினான்.

அந்நாட்டு மக்கள் அவ்வோட்டை ஒரு தெய்வமாக்கி அதற்குக் கோயில் கட்டினர். சமயப்பணியாளர் எவ்வளவு முயன்றும் இப்புதிய தெய்வவணக்கத்தைத் தடுக்க முடியவில்லை. அவர் சித்தாகிய கல்விப் பயிற்சி முறையை அவர்கள் ஏற்கச் செய்யவும் இப்புதிய தெய்வ வணக்கம் பெருந்தடையாயிற்று. ஏனெனில் அவர் எழுதிய எதனையும் அவர்கள் தெய்வமாகக் கொண்டு கும்பிடத் தொடங்கினரேயன்றி அதனைக் கற்றுக்கொள்ள முயன்றார்களில்லை.

சென்ற பொருள் மீளும்,சென்ற காலம் மீளாது

பொருள் முயற்சியில் முனைந்த வணிகர் ஒருவர் மதுரையில் பெரிய கடை ஒன்று வைத்திருந்தார். நாட்டுப்புறத்துச் செல்வர் ஒருவர் அவர்கடையில் வந்து ஒரு பொருளை வாங்க எண்ணி விலை கேட்டார். கடை வழக்கப்படி பையன் அதன் கண்டிப்பான விலை ஒரு வெள்ளி என்று முதலிலேயே கூறிவிட்டான். வாதாடியே கொடுக்கல் வாங்கல் செய்து பழகிய செல்வர் இரண்டு நாழிகை பையனுடன் வாதாடியும் மறுவிலை பெறாமையால் வணிகரிடமே நேரில் வந்தார். வணிகர் அப்போது தம் கணக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வேலையை ஒதுக்கி வைத்து விட்டு வந்தவரிடம், ‘தங்களுக்கு என்ன வேண்டும்?’ என்றார்.

செல்வர்: இப்பொருளின் விலை ஒரு வெள்ளியென்று இரண்டு நாழிகையாக உங்கள் பையன் சாதிக்கிறான். இதைக் குறைத்துக் கொடுக்கக் கூடாதா?

வணிகர்: இப்போது இதன் விலை ஒன்றரை வெள்ளி.

செல்வர்: என்ன ஐயா, பையன் கூறியதைவிடக் கூடுதல் கூறுகிறீரே?

வணிகர்: ஆம்; எங்கள் பொருளுக்கு ஒரே விலைதான். ஆனால் நீங்கள் பையனை நெடுநேரம் பேச வைத்துவிட்டீர்கள். அதற்காக அரை வெள்ளி தரவேண்டும். என்னையும் பேச வைத்தால், இன்னும் அரை வெள்ளி சேர்த்து இரண்டு வெள்ளி தரவேண்டும்.

செல்வர்: ஏன் ஐயா! பேசுவதற்குக் கூடவா பணம்?

வணிகர்: ஐயா, நீங்கள் முயன்று பொருள் ஈட்டியவர்கள் அல்லர்போல் தோன்றுகிறது. பொருள் செலவானால் வரும்; நேரம் செலவானால் வருவதில்லை. உம் நேரத்துடன் எங்கள் விலையேறிய நேரத்தை இனியும் வீணாக்கவேண்டாம்.

செல்வர்: தம் பிழையறிந்து இரண்டு வெள்ளியே தந்து அப்பொருளை வாங்கினார்.

ஆனால் அவர் கொடுத்த அதிகப்படி வெள்ளிக்கு அவர் அரியதொரு படிப்பினை பெற்றார்.

சிறியார் சிறு பிழையும்,பெரியார் பொறையும்

திருநெல்வேலி வட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இசையரங்குகள் நடத்திப் பொருளீட்டி வந்தான். பொருள் வருவாயை மிகுதிப்படுத்த அவன் கையாண்ட முறைகள் பல. அவற்றுள் ஒன்று அவன் வெளியிட்ட துண்டறிக்கையில் அவன், தன்னை இசைவாணராகிய மணவாள நம்பியின் மாணாக்கன் என்று குறிப்பிட்டுக் கொண்டதாகும். இக்குறிப்பு அவனுக்குப் பலர் நட்பையும் பாராட்டையும் தந்து மிகுதியான பொருள் வருவாயையும் உண்டு பண்ணவே அவன் எங்கும் இச்சூழ்ச்சியைக் கையாளலானான்.

மணவாள நம்பியின் ஊர் திருவனந்தை என்று அறியாத அவ்விளைஞன், அங்கும் இத்தகைய விளம்பரமே செய்திருந்தான். அவ்வூரார் ஒருவர் தற்செயலாக “நீர் மணவாள நம்பியின் மாணவராயிருக்கிறீரே, அவர் ஊரில் அரங்கு நடத்தும்போது அவரையும் அழைக்க வேண்டாமா?” என்றார்.

எதிர்பாராத இவ்வுரையைக் கேட்டதும் இளைஞனுக்குப் பெருங்கவலை ஏற்பட்டது. எங்கே தன் ‘குட்டு’ வெளிப்பட்டுத் தன் பிழைப்புக்குக் கேடு வருமோ என்று அவன் அஞ்சினான். ஆயினும் ஒருவாறு உளந்தேர்ந்து அவன் மணவாளநம்பியின் இல்லமுசாவி அங்கே சென்று அவரிடம் தன் ஏழ்மை நிலை, தன் முயற்சி ஆகியவற்றைக் கனிவுடன் எடுத்துரைத்து இறுதியில் பிழைப்பை எண்ணித் தான்செய்த சிறு பிழையை வெளியிட்டுத் தன்னைப் பொறுத்து ஆதரிக்குமாறு மன்றாடினான்.

முதுமையால் உடல் தளர்ச்சியுற்றிருந்த மணவாள நம்பி புன்முறுவலுடன், ‘சரி, அரங்கில் பாடப்போகும் பாடலைக் கொஞ்சம் பாடு பார்ப்போம்!’ என்றார். அரையுயிர் வந்த

வனாய் இளைஞன் பாடினான். மணவாளநம்பி அவற்றில் ஆங்காங்குச் சீர்திருத்தம் செய்து அப்பாடல்களைப் பின்னும் நயப்படுத்தியபின் ‘உன் பொய்யை மெய்யாக்கிவிட்டேன். இனி நீ கவலையின்றி உண்மையிலேயே என்மாணவன் என விளம்பரம் செய்யலாம்’ என்றார்.

மணவாள நம்பியிடமிருந்து இசையை மட்டுமின்றி வாழ்வின் இசையாகிய பெருந்தன்மையையும் அவன் கற்றுக்கொண்டான்.

வண்மையும் வீரமும்

படக்காட்சிகளில் நுழைவுச் சீட்டுகள் பெறும் போதும், மின்னூர்திக்குள் இடம் பெறப் போட்டியிடும்போதும் நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் நெருக்கித் தள்ளிக்கொண்டு அல்லலுறுவதைப் பலரும் பொதுப்படையான காட்சியாகக் கண்டிருப்பர். நமது தன்னலம், ‘பெண்டிருக்கும் பிள்ளைகளுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்’ என்ற அளவுக்கு இன்னும் பண்படவில்லை. பொது நிகழ்ச்சிகளிலேயே இப்படியானால் உயிர்க்கு ஊறுநேரும் காலத்தில் நம் நடைமுறையைப்பற்றிக் கேட்க வேண்டியதில்லை. மின்னூர்தியில் தீ ஏற்பட்டுவிட்டால் பிற பெண்களும் பிள்ளைகளும் என்று மட்டுமல்ல நம் பெண்டு பிள்ளைகளைக் கூடப் பாராமல் நசுக்கித் தள்ளிவிட்டு உயிர்தப்பிப் பிழைக்க விரையும் நிலைக்கு நாம் பண்பாடு கெட்டு விட்டோம். வகுப்பு வேற்றுமை காட்டும் மனப்பான்மையின் ஈனத் தன்மை வேறு.

இந்நிலையில் கீழ்வரும் ஆங்கில மக்களைப் பற்றிய வரலாறு நமக்கு ஓர் அரியபடிப்பினை ஆகும்.

உலகின் மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றாகிய ‘பிர்க்கென்ஹெட்’ ஆபிரிக்காக் கரைக் கப்பால் ஒரு பாறையில் மோதி மிக விரைவில் நீரில் முழ்கத் தொடங்கிற்று. கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் முக்கால் பங்குப் பேர் போர்வீரர்கள். மற்றவர்கள் பெண்டு பிள்ளைகள். கப்பல்களிலிருந்து தப்பியோடுவதற்கான படகுகள் நூறு இருநூறு பேருக்குமேல் ஏற்றிச் செல்லத் தக்கவையாயில்லை. கப்பல் தலைவரும், போர்வீரர் தலைவரும் யாது செய்வதெனச் சட்டென்று ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டியிருந்தது. போர்த் தலைவர் யாதொரு அட்டியுமின்றிப் “பெண்டு பிள்ளைகளைமட்டும் காப்பாற்றுங்கள். என் போர் வீரர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.”என்றார்.

உடனே போர்வீரர் தலைவர், போர்முரசறைந்து வீரரை அழைப்பித்தார். கப்பல் மீகாமன் பெண்டு பிள்ளைகளை அழைப்பித்தார். சில வினாடிகளுக்குள் அவர் ஆணைப்படி பெண்டு பிள்ளைகளும், சிலகிழவர்களும் படகுகளிலேறிக் கப்பலை விட்டு வெளியேறினர். போர்வீரர்கள் கப்பலின் மேல்தட்டில் அணிவகுத்து நின்று என்றுமில்லாப் பெரு

மகிழ்ச்சியுடன் அப்பெண்டு பிள்ளைகளிருந்த படகு நோக்கிக் கைக்குட்டையை வீசி அவர்களை வழியனுப்பினர்.

தமக்கென உயிர்மறுத்த வீர மறவரையெண்ணி , ஆங்கிலப் பெண்மணிகள் ஆராக் கண்ணீர் விட்டனர். ஆனால் மூழ்கும் கப்பலிலிருந்த வீரர், கப்பல் முழ்குமுன்னரே இருகூறாக அணிவகுத்து நின்று ஒருவரை ஒருவர் இலக்குத் தவறாது தலைவர் உத்தரவுப்படி ஒரே நொடியில் சுட்டுக்கொன்றனர்.

பழந்தமிழ் வீரர் மரபில் வந்த நாம் இத்தகைய வீரராகும் நாள் எந்நாள்? நம் பெண் மக்கள், நம் பிள்ளைகள், நம்மிடையே முதியோர், நலிந்தோர் ஆகியவரைப் பேணித் தன்னல மறுத்துப் புகழ் பெறும் நாள் எந்நாள்? அதுவே நன்னாள், அதுவே நம் நாள் ஆகும் என்னலாம்.

நாய் காட்டிய நன்றி

குற்றாலத்தை யடுத்த தென்காசி நகரில் மருதவாணர் என்ற பெருங்குடி வாணர் ஒருவர் இருந்தார். அவரிடம் செங்கோடன் என்றோர் அரியவேட்டை நாய் இருந்தது. மருதவாணர் சூரற்கா டடர்ந்த குற்றாலத்துக் குன்றுகளில் வேட்டையாடவும் வேடிக்கை பார்க்கவும் நாயுடன் போவது வழக்கம். குற்றாலத்துப் பருவமாகிய ஆனித் திங்களுக்கு மூன்று மாத முன்னாக மஞ்சுமூடிய நாளொன்றில் செங்கோடனுடன் சென்றவர் திரும்பி வரவில்லை. நெடுநாள் செங்கோடனைப் பற்றியும் மருதவாணரைப் பற்றியும் யாதொரு துப்பும் வாராமற் போகவே அனைவரும் இருவரையும் புலிதான் அடித்திருக்க வேண்டும் என்று எண்ணி வருந்தினர்.

மூன்று மாதங்கடந்து சூரல் குழை வெட்டச் சென்ற ஒரு குடியானவன் மழைக்காலத் தண்ணீர் குடைந்து ஏற்பட்ட முழைஞ்சு ஒன்றின் பக்கம் ஓர் ஈனக்குரல் கேட்டு அப்பக்கம் சென்றான். தோலும் எலும்புமான உயர்தர நாய் ஒன்று, எலும்பு வற்றலாய்க் கிடந்த ஒரு பிணத்தைக் காவல் காத்து நின்றதைக் கண்டான்.

நாயின் கழுத்துப் பட்டையால் பிணமானவர் மருதவாணரே என்று தெரிந்தது. மஞ்சு மூடியகொடும்பாறை உச்சியினின்று வீழ்ந்திறந்த அவர் உடலை, அப்பெரிய வேட்டைநாய் மூன்று மாத காலம் ஆளற்ற காட்டில் காத்து நின்றதென உய்த்துணர்ந்த அக்குடியானவன், வேறு சிலரை அழைத்து வந்து மருதவாணர் எலும்புக்கூட்டுடன் நாயையும் ஊர்கொண்டு வந்து சேர்த்தான். அவ்வெலும்பு எரிக்கப்பட்ட பின்னர், நாய் அவர் வீட்டிற்கு மீண்டது.

அதன்பின் வாரம் ஒரு முறையேனும் அந்நாய் எத்தகைய கட்டையும் அறுத்துத் தன் தலைவர் எலும்பு எரியூட்டப்பட்ட இடம் சென்று வந்ததென அந்நகரத்தார் கூறுகின்றனர்.

தந்தை சொற் பிழைத்ததற்கான தண்டனை

ஆங்கில நூலாசிரியரிடையே பேனாமுனைத் திறமட்டுமன்றி நாத்திறமும், அறிவோடு அன்பும் அமைதியும் நிறைந்த உளப்பாடும் பெற்ற அருளாளர், பேராசிரியரென நன்மதிப்புப் பட்டம் பெற்ற ஜான்ஸன் என்ற பெரியார். அவருடைய பெரு வாழ்விலுள்ள சிறு பிழை ஒன்றை மிகுந்த சுவையுடன் அவர் எடுத்துக் கூறியிருக்கிறார்.

பெரியார் என்றும் பேரறிஞர் என்றும் மதிக்கப் பட்ட அவர், ஒருகால் உச்சி வேளையில் லிச்ஃபீல்டு என்ற நகர்ச் சந்தையில் மக்கள் நடமாட்ட மிகுதியாலும் பொருட்சிதைவாலும் அருவருக்கத்தக்க முறையில் சேறாகக் கிடந்த பகுதி ஒன்றில் யாவருங் காண மேலாடையும் தலையணியும் அகற்றி அரை நாழிகை நேரம் நின்றாராம். அது எதற்கென அறியாது முதிய பெண்டிரும் சிறுவர் சிறுமியரும் அவரை எள்ளி நகையாடின ராம். ஆனால் அவர் அங்ஙனம் வாளா நின்று ஒருவரிடமும் ஒன்றும் கூறவில்லையாம், பின்னர் தம் இல்லத்திற்குத் திருப்பிச் சென்றாராம்.

இதனை கவனித்திருந்த அறிஞர் ஒருவர் நெடுநாள் கழித்து அவரைக் கண்டபோது அதுபற்றி உசாவினார். அப்போது அவர் கூறியதாவது.

"இளமைக் காலத்தில், ஒரு நாள் என் தந்தை சந்தைக்குப் போகும்போது என்னையும் உடனழைத்துச் செல்ல விரும்பினார். அப்போது நான் கல்லூரி மாணவனாயிருந்தேன். ஆரவார உடையில் விருப்பமும், பகட்டு வாழ்வும் என்னிடம் குடி கொண்டிருந்தன. ஆகவே, அன்று விடுமுறை நாளாயிருந்தும் நாட்டுப்புற உடையில் சென்ற என் தந்தையுடன் என் நண்பர்களும் பிறரும், காணச் சந்தைக்குக் கூடை சுமந்து செல்ல வெட்கி நான் உடன் செல்ல மறுத்துவிட்டேன்.

“அதே சந்தைப் பக்கமாகப் பெரியவனான பின் நான் போனபோது இச்செய்தி எனது நினைவுக்கு வந்தது. என் பிழையை நான் உணர்ந்து கொண்டேன். நேரில் மன்னிப்புப் பெறத் தந்தை அப்போது உயிருடனில்லை. ஆகவே அவர் உயிர் நிலையை எண்ணி நானே என்னைத் தண்டிப்பதன் வாயிலாக மனச்சான்றின் வழி அவர் மன்னிப்பைப் பெற எண்ணினேன். முன் தந்தை பணிமீறக் காரணமாயிருந்தது ‘பிறர் ஏளனஞ் செய்வார்களே’ என்ற அச்சமே யாதலால் அவ்வேளனத்தை இப்போது விரும்பி மேற்கொள்வதனால் தந்தை உயிர் நிறைவடையும் என்று எண்ணி அங்ஙனம் சந்தையிற் சென்று நின்று என் குற்றத்திற்குக் கழுவாய் தேடினேன்” என்றார்.

அறிஞர்க்கும் பிறர்க்கும், இச் செய்தி கேட்டு உள்ளூர நகை ஒரு புறமும், பரிவு ஒருபுறம் தோன்றின. ஆனால் அவற்றின் மிகுதியாக அப்பெரியாரின் எளிமையினிடையே தோன்றிய பெருந்தகைமைகண்டு மகிழ்வும் இறும்பூதும் வேறு தோன்றின.

“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதனை விளக்க இதனினும் சிறந்த நிகழ்ச்சி காணக் கூடுமா?

ஐம்பது ரூபா இலாபமே

ஒரு தொழிற்சாலையின் தலைவர் மிகுந்த கண்டிப்புள்ளவராக இருந்தார். அவர் தமது நேரத்தைச் சிறிதும் வீண் போக்குவதே இல்லை. பத்திரிகைக்குச் செய்தி யனுப்புவோர் முதலானவர்களை அவர் பார்ப்பதே இல்லை.

ஒருநாள் பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர் தம்மைச் சிறிது நேரம் பார்த்துப் பேசவேண்டும் என்று செய்தியனுப்பினார். அதற்குத் தொழிற்சாலைத் தலைவர் தாம் யாரையுமே பார்ப்பது இல்லையென்றும் அப்படிக் கட்டாயமாகப் பார்த்துத்தான் தீரவேண்டுமென்னின் ஐந்து நிமிட நேரம் மட்டும் பார்க்கலாமென்றும் அதன் பொருட்டு ரூபா ஐம்பது தரவேண்டும் என்றுஞ் செய்தியனுப்பினார்.

பத்திரிகைச் செய்தியாளர் (நிருபர்) ரூபா ஐம்பது தந்து ஐந்து நிமிட நேரம் பேச விருப்பம் என்றும் மறு மொழி அனுப்பினார். தொழிற்சாலைத் தலைவர் அதற்கு நாளும் மணியுங் குறிப்பிட்டுத் தெரியப்படுத்தினார்.

குறிப்பிட்ட நாளில் பத்திரிகையாளர் தொழிற்சாலைத் தலைவரைப் பார்த்தார். அவர் கேட்டிருந்த படி ரூபாய் ஐம்பதையுங் கொடுத்துவிட்டு ஒன்றுக்கும் பயனற்ற வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடமானதும் தொழிற்சாலைத் தலைவர், பத்திரிகையாளரைப் பார்த்து, “நீர் ரூபா ஐம்பதை இழந்துவிட்டீர் போலிருக்கிறதே” என்றார்.

இதனைக் கேட்ட பத்திரிகையாளர், “அப்படியன்று, ஐம்பது ரூபா இலாபமே” என்று கூறினார். தொழிற்சாலைத் தலைவர், “அஃதெப்படி இலாபம்?” என்று கேட்கப் பத்திரிகையாளர், “நானும் என் நண்பர் ஒருவரும் பந்தயம் போட்டோம்; அவர் தங்களைப் பார்க்கவே முடியாதென்றும் அப்படிப் பார்த்துவிட்டால் தாம் ரூபா நூறு தருவதாகவும் உறுதி மொழி கூறினார்; நானோ தங்களைப் பார்க்க முயன்று வெற்றியடைந்தேன், தங்கட்குக் கொடுத்த ரூபா ஐம்பது போகப் பாக்கி ரூபா ஐம்பதும் இலாபமே” என்று கூறினார்.

இதனைக் கேட்ட தொழிற்சாலைத் தலைவர், ‘அப்படியா செய்தி?’ என்று சொல்லி மூக்கின் மேலே விரலை வைத்தார்.

அழுகைக்குக் காரணம்

நீதி மன்றத்திலே ஒரு வழக்கு நடைபெறுகிறது. வழக்காளியாக ஏற்பட்டது ஒரு நான்கு வயதுக் குழந்தை, குழந்தையின் பக்கமாகச் சொற்போரிட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞரானவர் நீதிமன்றத் தலைவருடைய மனத்தை மாற்ற எண்ணினார். அவர் நீதிமன்றத் தலைவரைப்பார்த்து, “இச்சிறு குழந்தையைப் பாருங்கள். இன்னுங் கண் திறவாத பச்சிளங் குழந்தை. தாய் தந்தையர் இருவருமே இறந்துபோய் விட்ட படியினால் திக்கற்றவனாய் இறக்கை யில்லாத பறவையைப்போல் இருக்கிறான். இவன் மீது நீங்கள் இரக்கங் காட்டாம லிருப்பீர்களாயின் எதற்கும் பயனற்றவனாகப் போய்விடுவான்” என்று பலவாறு பேசியதோடு குழந்தையைக் கையிலே தூக்கிக் காட்டி உருக்கமாகப் பேசினார்.

அப்போது வழக்கறிஞருடைய கையிலே இருந்த குழந்தை கூச்சலிட்டு அழுதான். அதைப் பார்த்து நீதிமன்றத் தலைவர் மனஇரக்கத்தோடு எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்.

இதனைக் குறிப்பாக உணர்ந்துகொண்ட எதிர் வழக்காளியின் வழக்கறிஞரானவர் எழுந்து, “குழந்தாய்! நீயேன் இப்படிக் கதறியழுகிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அச்சிறுவன், “எவனோ என் பின் பக்கத்திலே அடிக்கடி கிள்ளுகிறான்” என்று சொல்லிக்கொண்டே, மேலும் அழுதான்.

பட்டை நாமம்

ஓர் ஊரில் மருதப்பன் என்னும பெயருடையவன் ஒருவன் இருந்தான். இவனுக்குச் சிறிது நிலபுலன்கள் இருந்தன. மக்கட் பேறு அதிகமாகிக் குடும்பம் பெருகிக் கொண்டிருந்தது. நிலபுலங் களின் வருவாய் குடும்பத்தைப் பாது காப்பதற்குப் போதியதாக இல்லை.

ஆகவே மருதப்பன் ஊரார்கள் எல்லோரிடமும் நூறு ரூபா, ஐம்பது ரூபா இப்படியாகக் கடன் வாங்கிச் செலவு செய்தான். நிலபுலங்களையும் கடன்காரர்கட்குக் கொடுத்து விட்டான். இவனிடங் கொடுத்தால் நிலபுலம் இருக்கிறது வாங்கிவிடலாம் என்று எண்ணியவர்கள் இவனுடைய நிலபுல மதிப்பிற்குமேல் பத்து மடங்கு கடன் இருப்பதை உணர்ந்தார்கள்.

ஒவ்வொருவருந் தத்தமது கடன்களை வாங்கிவிட வேண்டும் என்று அலைந்தார்கள். மருதப்பன் எல்லோரையும் வரும்படி ஒரு நாளைக் குறிப்பிட்டான். குறிப்பிட்ட நாளில் கடனைத் தருவதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கிறான்போலும் என்று எண்ணினார்கள். குறிப்பிட்ட நாளில் மருதப்பனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். திருநீறு பூசுபவனாகிய மருதப்பன் அன்று தன்னுடைய நெற்றியிலேயே ஒரு பெரிய பட்டை நாமத்தை அணிந்திருந்ததோடு கை மார்பு முதுகு ஆகிய எல்லா விடங்களிலும் பட்டை நாமங்களைச் சார்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

கடன் கேட்கச் சென்றவர்கள் வாய்திறந்து எதுவுங் கேட்கவில்லை. அவனுடைய பட்டை நாமக்கோலத்தைப் பார்த்துக்கொண்டு யாதும் பேசாமல் திரும்பி விட்டார்கள். மருதப்பன் தன்னுடைய வாய்திறந்து பேசவேண்டிய வேலையே இல்லாமற் போய்விட்டதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

எனக்கு வீண் தொல்லைதானே

ஒரு செல்வனிடத்திலே ஓர் அரைச் சோம்பேறி வேலையாளாக அமர்ந்திருந்தான். சொன்ன வேலைகளை அந்தச் சண்டி ஒழுங்காகச் செய்யவே மாட்டான். ஏதாவது தில்லுமல்லுப் பேசிக்கொண்டு அரைகுறையாகச் செய்து முடிப்பான். ஆயினும் அவ்வேலையாளைச் செல்வன் விரட்டிவிடவில்லை. ஏதோ ஒரு பற்றினால் வைத்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் செல்வனுக்குச் சிறிது காய்ச்சல் கண்டது. அவன் வேலையாளைப் பார்த்து, “மருத்துவர் வீட்டிற்குப் போய் அவரை உடனடியாக அழைத்துக்கொண்டுவா” என்று சொன்னான். பிறகு இருவருக்கும் பின்வருமாறு உரையாடல் நடைபெற்றது.

வேலையாள்: இப்பொழுது காலை பத்து மணி. மருத்துவர் வீட்டில் இருக்கிறாரோ, அல்லது எங்கேனும் வெளியே போய்விட்டாரோ?

செல்வன்: வீட்டில் இருப்பார் போய்ப்பார்

வேலை: இருந்தாலும் உடனே வருகிறாரோ அல்லது பிறகு வருகிறேன் நீ போ என்கிறாரோ.

செல்வன்: வருவார் போ.

வேலை: அப்படி இருந்து அவர் உடனே இங்கு வந்து மருந்து கொடுத்தாலும் காய்ச்சல் நிற்கிறதோ இல்லையோ?

செல்: மருந்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்று விடும் போ.

வேலை : அப்படி நிற்காவிட்டால் என்ன செய்கிறது?

செல்: (எரிச்சலோடு) நிற்காவிட்டால் சாகிறேன் போ.

வேலை: அப்படிச் சாகிற நீங்கள் எனக்கு வீண் அலைச்சல் கொடுக்காமல் சாகக்கூடாதோ? அலைவது வீண் தொல்லைதானே.

செல்: சரி, சரி. நீ நல்ல வேலையாள். இனி மேல் உனக்கும் நமக்கும் ஒத்துவராது வேறிடம் பார்த்துக்கொள்.

கள்ளன் சிக்கினான்

ஓர் அரசனுடைய அரண்மனையில் இருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று களவு போய்விட்டது அரண்மனையில் ஐம்பது அறுபது வேலைக்காரர்கள் இருந்தனர். எல்லோரையும் நன்கு உசாவியும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் அமைச்சன் கள்ளனைப் பிடிக்க ஒரு சூழ்ச்சியைக் கண்டு பிடித்தான். மாலையில் எல்லா வேலைக்காரர்களையும் அழைத்தான். ஒரு முழ நீளம் உள்ள கழி ஒன்றை எல்லோருடைய கையிலும் கொடுத்து அவர்களைப் பார்த்து, “எல்லோரும் இக்கழியைக் காலையில் என்னிடம் கொண்டுவாருங்கள். மோதிரத்தைக் களவு செய்தவனுடைய கழி ஓரங்குலம் அதிகமாக வளரும்படி மந்திரஞ் செய்திருக்கிறேன். காலையில் எல்லாக் கழிகளையும் சரிபார்த்துக் கள்ளனைப் பிடித்து விடுகிறேன்” என்று சொன்னான்.

வேலைக்காரர்கள் எல்லோரும் கழியைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். மோதிரத்தைக் களவு செய்தவனுக்கு மட்டும் உறக்கமே பிடிக்கவில்லை. மந்திர சக்தியினால் தடி வளர்ந்து காலையில் நம்மைப் பிடித்துக் கொண்டால் என்ன செய்கிறது; இத்தொல்லையிலிருந்து தப்புவதற்கு ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டுமென்று இரவெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

வைரமோதிரக் கள்ளன் மனத்தில் இரவே ஒரு சூழ்ச்சி தோன்றியது. காலையில் எழுந்தவுடன் வேறொன்றும் எண்ணாமல் தன்னுடைய கழியை எடுத்து ஓர் அங்குலத்தைக் குறைத்து விட்டு அமைச்சனிடங் கொண்டு சென்றான். அமைச்சன் எல்லோருடைய கழியையும் வாங்கிச் சரி

பார்த்துக் கொண்டே யிருந்தான். கள்ளன் கழியை அளந்து பார்த்தபோது ஓர் அங்குலம் குறைவாக இருந்தது. அமைச்சன் கள்ளளைப் பிடித்து நன்கு உதைக்கச் செய்தான். கள்ளன் உண்மையை ஒப்புக் கொண்டான். சரியான தண்டனை கிடைத்தது.

குருடன் கைவிளக்கு

ஒரு நாள் இரவு ஒரு குருடன் கையிலே விளக்கோடு தெருவிற் சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த ஒரு மனிதன் குருடன் விளக்கோடு செல்வதைப் பார்த்து நகைத்து, “ஓ குருடரே! உமக்குத்தான் ஒளியும் இருளும் ஒன்றாயிற்றே! அவ்வாறாக நீர் கையில் விளக்கையெடுத்துக் கொண்டு போவதனால் என்ன பயன்? கண்குருடானதோடு அறிவுகூடக் குருடாகி விட்டது போல் தெரிகிறதே” என்று சொன்னான்.

இதனைக் கேட்கவே குருடனுக்கு மிகுந்த சினமுண்டாகி விட்டது. அவன் தன்னோடு பேசிய அம்மனிதனைப் பார்த்து, “உனக்குக் கண் தெரிகிறதென்று குதிக்கிறாய்; ஆனாலும் என்ன இரவில் உனக்கும் கண் தெரியாதல்லவா? அறிவுக் கண் எனக்குக் குருடாகவில்லை. உனக்குத்தான் குருடாகிவிட்டது. என் கையிலே விளக்கிருந்தால் எதிரே வருபவர்கள் மேலே முட்டிவிடாமல் ஒதுங்கிப் போவதற்கு உதவியாக இருக்கும். இதற்காகவே நான் விளக்கெடுத்துக் கொண்டு போகிறேன். உன் அறிவுக் கண் குருடாக இருப்பதனால் அன்றோ, இச்சிறிய செய்திகூட உனக்கு விளங்காமற் போய்விட்டது” என்றான். இதனைக் கேட்டு அம்மனிதன்தான் இவனிடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டோமே என்று மிகுந்த நாணத்தோடு போய்விட்டான்.

இன்றைக்கு நீங்கள் சொன்னபடி செய்தேன்

ஒரு செல்வனிடத்தில் ஒரு வேலையாள் இருந்தான். அவ்வேலையாள் கூர்மையான அறிவுள்ளவன் அல்லன். ஒரு வகையான மடையன். செல்வன் அவனை அடிக்கடி கண்டித்து அறிவுரைகள் கூறுவான். ஒரு நாள் அவனைப் பார்த்து, “எக்காரியத்தைச் செய்தாலும் அக்காரியத்திற்குப் பின் ஏற்படக்கூடிய பலனையும் ஆராய்ந்து பார்த்து அதற்குத் தக்கபடியாகக் காரியங்களைச் செய்வது தான் அறிவாளிக்கு அழகு” என்று அறிவுரைகள் கூறினான்.

பிறகு அவ்வாளைப் பார்த்து, “எனக்குச் சில நோய்கள் இருக்கின்றன. அதற்கு ஆட்டு ஊனைத் தின்றால் நோய் நீங்கிவிடும் என்று மருத்துவர் சொல்லுகிறார். நான் ஊன் உண்ணாத சைவன் என்பது உனக்குத்தான் தெரியுமே. நீ மிக மறைமுகமாக ஆட்டுக் கறி வாங்கிக் கறியாக்கு” என்று சொன்னார்.

அந்த மடையன், அவ்வாறே செய்வதாகச் சொல்லிட்டுச் சந்தைக்குச் சென்றான். அங்குப் பலரை ஓரிடத்திற்குக் கூப்பிட்டு ஒன்றாகச் சேர்த்து அவர்களைப் பார்த்து, “என் வீட்டு தலைவரை நீங்கள் யாவரும் அறிவீர்களன்றோ? அவர் சைவர் என்பதுதான் உங்களுக்கெல்லாந் தெரியுமே. அவர் ஒரு நோயின் பொருட்டு இன்று ஆட்டுக்கறி சாப்பிடப் போகிறார். இச்செய்தி மிக மறைமுகமாக இருக்கவேண்டும். ஆட்டுக்கறி தின்றால் அதன்மேல் செய்ய வேண்டியதென்ன? ஒரு காரியத்தைச் செய்தால் அதன் பிறகு ஏற்படக்கூடிய நிலைமையையுந் தெரிந்து காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய தலைவர் கட்டளை” என்று சொன்னான்.

கூட்டத்தில் இருந்த ஒருவன், “ஆட்டுக்கறி எளிதில் செரிக்கமாட்டாது. செரிப்பதற்குச் சாராயம் சாப்பிட வேண்டும். சாராயமும் ஒரு புட்டி வாங்கிக்கொண்டு போ” என்றான்.

மற்றொருவன், “ஆட்டுக்கறி சாராயம் முதலியன சாப்பிட்டால் காமவெறி உண்டாகும். விலைமாதரையும் அழைத்துப்போ” என்றான்.

வேறொருவன், “விலைமாதர் கூட்டுறவால் நோயுண்டாகலாம். அப்பொழுது நோய் தீர்ப்பதற்கு மருத்துவர் உதவி வேண்டும் மருத்துவரையும் அழைத்துப்போ” என்றான்.

இன்னொருவன், “மருத்துவர் மருத்துவத்தால் ஆள் பிழைக்காமல் எமலோகப் பயணம் ஆனாலும் ஆகக்கூடும். ஆகவே பிணம் எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையுஞ் செய்து கொண்டு போ” என்றான்.

அவ்வளவில் வேலையாள், ஆட்டுக்கறியும், சாராயமும் வாங்கிக்கொண்டு, விலைமாதர், மருத்துவர் ஆகியோரிடஞ்சென்று, “தலைவர் வரச்சொன்னார்” என்று கூறிவிட்டுப் பிணமெடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாவற்றையுஞ் செய்து கொண்டு சென்றான்.

வேலையாள் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் எல்லோரும் செல்வர் வீட்டை அடைந்தார்கள். விலைமாது போய்ச் செல்வரைக் கண்டு கும்பிட்டாள். மருத்துவர் வந்து செல்வரைப் பார்த்து “உடம்புக்கு என்ன?” என்று கேட்டார். பறையர், வண்ணார், நாவிதர் முதலியவர்களும் வீட்டு வாசலுக்கு வந்தார்கள்.

இவர்களையெல்லாம் காணவே செல்வனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லோரையும் பார்த்து, “என்ன செய்தி?” என்று கேட்டான். எல்லோரும் வேலையாள் வரச்சொன்னதாகத் தெரிவித்தார்கள். வேலையாளைக் கூப்பிட்டு, “இவர்களையெல்லாம் எதற்காக வரச்சொன்னாய்?” என்று கேட்டான். அதற்கு வேலையாள், “இன்றைக்கு நீங்கள் சொன்னபடியே செய்தேன். ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குப் பிறகு ஏற்படக்கூடிய பலன்களையுந் தெரிந்து காரியஞ் செய்யச் சொன்னீர்கள் அல்லவோ” என்று சொல்லிவிட்டுச் சந்தையில் பலருஞ் கூடியிருந்த அவ்வளவுபேரும் நகைக்கச் செல்வனுங் சேர்ந்தே நகைத்தான். நகைக்காமல் வேறு என்ன செய்கிறது?

ஏழு கும்பகருணர்கள்

முன்காலத்திலே ரோம் நகரத்தில் செங்கோல் செலுத்திய அரசர்களில் ஒருவனுக்கு டீஸியஸ் என்று பெயர். அவனுடைய அரசாட்சியின் காலத்தில் கிறித்து மதாபிமானிகள் பலர் கொலையுண்டார்கள். அம் மதப் பற்றுடையவர்களுக்குள்ளே மேன்மக்கள் வரிசையைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் எபேசு நகரத்தில் இருந்தார்கள். மதத்தின் பொருட்டுத் தங்கள் குலத்தவர்களில் பலர் கொலைசெய்யப்படுகிறதைக் கண்டு அந்த ஏழு இளைஞர்களும் பக்கத்தில் இருந்த ஒரு காட்டிற்குப் போய் அங்கிருந்த மலைக்குகை ஒன்றிற் புகுந்து ஒளிந்துகொண்டார்கள். மேற்படி அரசன் அதை அறிந்தான். அவர்கள் வெளியே வரமுடியாதபடி அந்தக் குகைவாசலை அடைத்து விடச் செய்தான்.

மேற்படி ஏழு இளைஞர்களும் குகைக்குள்ளே படுத்து மெய்ம்மறந்தவர்களாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு நூற்றெண்பத்தேழு ஆண்டுகள் உறங்கியபிறகு இரண்டாவது தீயோவோஸியஸ் அரசன் செங்கோல் செலுத்திய நாளையிலே தற்செயலாய் இயல்பாகவே விழித்து எழுந்திருந்தார்கள்.

இவ்வாறு நெடுங்காலம் உறங்கியபடியால் அவர்களுக்குப் பொறுக்கமுடியாத பசி உண்டாகியது. குகை வாசலைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். பிறகு தங்களில் ஒருவனை நகரத்திற்கு அனுப்பி உணவுப்பொருள்கள் வாங்கிக் கொண்டு வரச்சொன்னார்கள். அவன் நகரத்திற்குள் நுழைந்து தெருவழியே சென்றான். நகரம் எங்கும் இடத்துக்கிடம் சிலுவைகள் நட்டிருப்பதைக்கண்டு வியப்படைந்தான். பிறகு ஒரு ரொட்டிக்கடைக்குச் சென்றான். ரொட்டிக் கடைக்காரன் இந்த இளைஞன் அணிந்திருந்த பழைய காலத்து உடையையும் பழைய போக்கான மொழியில் அவன் பேசிய பேச்சையுங்கண்டு வியப்படைந்தான். அந்த இளைஞன் உற்றுப்பார்த்தான். இளைஞன் தான் வாங்கிய ரொட்டிக்குப் பழங்காலத்து நாணயம் ஒன்றைத் தன் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தான். மேற்படி ரொட்டிக் கடைக்காரன் இளைஞனுடைய நடைஉடையையும் அவன் மொழிகளையும் பார்த்து அவனைப் பட்டிக்காட்டான் என்றும் எங்கேயோ புதையலெடுத்து இந்தப் பழைய நாணயங்களைக் கொண்டு வந்திருக்கிறான் என்றும் முடிவு செய்தான். அந்த இளைஞனை அழைத்துக்கொண்டு போய் நகரத்தலைவன் முன்பு நிறுத்தினான்.

நகரத் தலைவன் இளைஞனைப் பார்த்து, “இந்தப் பழைய நாணயம் உனக்கு எங்கே அகப்பட்டது? நீ புதையல் எடுத்தாயா?” என்று உசாவினான். இளைஞன் தன் வரலாற்றையும் தன் கூட்டாளிகளைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னான். நகரத் தலைவன் இதனைக் கேட்டுப் பெருவியப்படைந்தான். அவனை அரசனிடத்திற்கு அழைத்துக்கொண்டு போய் நிறுத்தினான். அரசன் இளைஞன் மூலமாக எல்லாச் செய்திகளையும் உணர்ந்தான். தன்னுடைய அமைச்சன் குரு முதலான எல்லோரையும் அழைத்துக்கொண்டு குகைக்குச் சென்றான். குகையில் மற்றைய இளைஞர்களையும் எல்லோரும் பார்த்தார்கள். நூற்றெண்பத்தேழு ஆண்டுகளாகியும் அவர்களுடைய இளமைக்குரிய உடற்கட்டுக் குன்றாதிருப்பதைப் பார்த்து எல்லோரும் வியப்படைந்தார்கள்.

அரசன் அந்த ஏழு இளைஞர்களையும் தன்னோடு நகரத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தான். ஊர் நடுவிலேயிருந்த பெரிய மைதானம் ஒன்றில் பொதுக்கூட்டம் ஒன்று கூடியது. நகர மக்கள் எல்லோரும் அங்கு வந்து கூடினார்கள். இளைஞர்கள் தங்களுடைய வரலாறுகளை முதலில் இருந்து முடிவுவரை விளக்கமாகச் சொன்னார்கள். பிறகு நகரமக்கள் அனைவருக்கும் வாழ்த்துரை கூறினார்கள். நின்ற இடத்திலேயே விழுந்து இறந்து போனார்கள். ஆண்டு தோறும் சூன் திங்கள் இருபத்தேழாம் நாள் (அந்த இளைஞர்கள் இறந்த நாள்) அவர்களுடைய நினைவைக் கொண்டாடும் விழா நடந்து வருகிறது.

வால் இருக்க வேண்டிய இடத்தில் தலை

பல ஆண்டுகளுக்கு முன்னர் மாளவ நாட்டில் வறியவன் ஒருவன் இருந்தான். பொருள் தேடி நலமடையலாம் என்று அவன் பலவாறு முயன்றான். அவனுக்கு எந்தக் காரியமுங் கைகூடி வரவில்லை. அந்த ஊரில் உள்ள மக்கள் யார் என்ன சொன்ன போதிலும் சிறிதும் ஆராய்ந்து பாராமல் கேள்விப் பட்டவைகளையெல்லாம் உண்மை என்று நம்பும் இயல்பினையுடையவர்கள். இதனை நன்கு உணர்ந்தவறியவன் அம்மக்களை வஞ்சித்துப் பொருள் திரட்டவேண்டும் என்று எண்ணினான்.

ஒரு நாள் ஒருவருக்குந் தெரியாமல் தன்னுடைய குதிரையைக் குதிரை லாயத்தில் வால் பக்கம் இருக்க வேண்டிய இடத்தில் தலைப் பக்கம் இருக்கும்படி வழக்கத்திற்கு விரோதமாகத் திருப்பிக் கட்டி வைத்தான். பிறகு லாயத்தைப் பூட்டி விட்டு வெளியே வந்தான்.

“ஓ மக்களே! வால் இருக்க வேண்டிய இடத்திலே தலை யிருக்கும் குதிரையைப் பார்த்தீர்களா? என்னுடைய லாயத்தில் அத்தகைய புதுமையான குதிரை ஒன்று இருக்கிறது. வேடிக்கை! வேடிக்கை! ! கட்டாயம் பார்க்க வேண்டிய வேடிக்கை; பார்க்க வருபவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று எங்கும் பறையறிவித்தான். துண்டுத் தாள்கள் அச்சிட்டு பரப்பினான்.

“சொன்னவர் சொன்னாலும் கேட்பவர்கட்கு மதியில்லையா” என்னும் பழமொழியையும் எண்ணிப் பாராமல் அப்புதுமையைக் காணும் பொருட்டுப் குறிப்பிடப்பட்ட நாளில் மக்கள் அந்தக்கோமாளியினுடைய குதிரை லாயத்துக்கு அண்மையில் வந்து கூடினார்கள். மோசக்காரன் ஒவ்வொரு வரிடத்திலும் ஒவ்வொரு ரூபாய் வாங்கிக்கொண்டு இறுதியில் லாயத்தின் கதவைத் திறந்தான். உள்ளே நுழைந்த அவ்வளவு பெயரும் தம்முடைய அறியாமைக்காக வெட்கமடைந்தது மட்டுமல்லாமல், குதிரைக்கு வாலிருக்க வேண்டிய இடத்தில் தலையிருக்கிறது என்று அவன் சொன்ன சூதை அறிந்து கொண்டு, ஐயோ சிறிது எண்ணிப் பார்க்காமற் போனோமே. இவ்வளவு பேரிடத்திலிருந்தும் பணத்தைப் பறித்துக் கொண்டு பைத்தியக்காரர்களாக்கி விட்டானே என்று மிகுந்த வருத்த மடைந்தார்கள். அவன் கூறிய செய்தி தவறான தென்று அவன் மீது குற்றஞ் சாட்டுவதற்கும் இடமில்லை. அவன் கூறிய படியே வால் இருக்க வேண்டிய இடத்தில் தலை இருந்தது.